அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!-புருஜோத்தமன் தங்கமயில்

514 0

நாட்டு மக்களின் இறைமை மீண்டும் ஒருதடவை கேலிப்பொருளாகியுள்ளது.   

மக்கள்  ஆணையைப்  பெற்று, ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, அதே மக்களின் ஆணையைப்பெற்று, ஜனநாயக மரபுகளுக்கும் அரசமைப்புக்கும் உட்பட்டு, ஆட்சியமைத்த அரசாங்கமொன்றைப் பலவந்தமாகப் பதவி நீக்கியிருக்கின்றார்.

இது, அரசமைப்பு மீதான அச்சுறுத்தல் மாத்திரமல்ல, மக்களின் இறைமையைப் பாதுகாக்கின்ற, பொறிமுறைகள் மீதான தாக்குதலும் ஆகும்.

மக்களின் இறைமையைப் பாதுகாக்கும் பொறிமுறைகளில், நாடாளுமன்றமும் நீதித்துறையும் சட்டத்தின் ஆட்சியும் பிரதானமானவை. ஜனாதிபதிப் பதவியும் அதன் ஒரு வடிவமே.

ஆனால், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தின் மீது, அரசமைப்புக்கு முரணான வகையில் தலையீடுகளைச் செய்வதன் மூலமும், நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து, அரசமைப்புக் குழப்பங்களை உருவாக்கியதன் மூலமும், மைத்திரி, நாட்டை நட்டாற்றில் விட்டிருக்கிறார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கியதாக, ஜனாதிபதி அறிவித்தது முதல், இப்போது வரையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் காணும் போது, ராஜபக்‌ஷக்களின் ஆட்சிக்காலத்தின் அச்சுறுத்தல்களுக்கு ஒப்பான நிலைமையொன்றை மீண்டும் எதிர்கொள்ள வேண்டி வருமோ என்கிற பயமும் பதற்றமும் ஏற்படுகின்றது.

2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், பல்லுப் பிடுங்கப்பட்ட நிலையில் காத்திருந்த தரப்புகள், மீண்டும் அதிகாரத்தில் அமர்ந்ததும் ஊடகங்களை அச்சுறுத்திக் கொண்டு, தங்களது மீள்வருகையைப் பதிவு செய்திருக்கின்றன.

கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரத்தின் அளவைக் கொண்டு, ஒரு நாட்டின் ஜனநாயக அடிப்படைகளை அறிந்து கொள்ள முடியும். கடந்த நான்கு ஆண்டுகளாக, குறிப்பிட்டளவு உறுதிப்படுத்தப்பட்ட ஜனநாயக அடிப்படைகளை, மக்கள் ஆணைக்கு எதிராக, மைத்திரி எடுத்த முடிவொன்று, ஒரே நாளில் அச்சுறுத்தலுக்குள் தள்ளிவிட்டது.

மஹிந்த ராஜபக்‌ஷ, பிரதமர் பதவியில் அமர்ந்த சில மணி நேரங்களிலேயே, அரச தொலைக்காட்சியொன்று முடக்கப்படும் அளவுக்கு நிலைமை சென்றிருக்கின்றது. அரச நிறுவனங்களில் கட்சி சார் தொழிற்சங்கங்களின் தலையீடுகள், இயங்கு நிலையைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன.

ராஜபக்ஷக்களின் அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான பெரும் அறைகூவலை விடுத்தபடி, தேவ தூதனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டே மைத்திரி, 2015 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். அவரின் தேர்தல் வெற்றி என்பது, ஓரினம் சார்ந்தோ, சமூகம் சார்ந்தோ இருக்கவில்லை. ஒட்டுமொத்த நாட்டின் வெற்றியாக உணரப்பட்டது.

இனத்துவ அரசியல் கோலொச்சும் நாட்டில், அனைத்து இன மக்களும் வாக்களித்து ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்பட்டவர் மைத்திரி. யாருக்கு எதிரான ஆணையை மக்களிடம் அன்றைக்குப் பெற்றாரோ, அதையெல்லாம் மீறி, அவர்களிடமே இன்று தஞ்சமடைந்திருக்கின்றார். ராஜபக்ஷக்களிடம் தஞ்சமடையும் முடிவை எடுத்த புள்ளியிலிருந்து அவரும், அதிகார துஷ்பிரயோகத்தைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

மக்களின் ஆணைக்கு எதிராக அரசாங்கமொன்றை ஆட்சியில் அமர்த்த முடிவு செய்தது மாத்திரமல்லாமல், அந்த அரசாங்கத்துக்கு அங்கிகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், குதிரை பேரங்களுக்கான வாய்ப்புகளையும் ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அதன்போக்கிலேயே, நவம்பர் 16ஆம் திகதி வரையில், நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அறிவித்தலையும் விடுத்திருக்கின்றார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய, நேற்று (30) கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தியிருந்தார். இதன்போது, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை உறுப்பினர்களின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு, விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்டும் அறிவித்தலை, சபாநாயகர் வெளியிட்டார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு என்கிற, இன்னொரு வாக்குறுதியையும் மக்களிடம் வழங்கி, அதன் போக்கில் 19ஆவது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலமும் மைத்திரி, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கவனம் பெற்றார்.

ஆனால், அதை அவரே மீறிச்செயற்பட்டு, இன்றைக்கு சர்வதேச அழுத்தத்துக்கும்  உள்ளூரின் விசனத்துக்கும் உள்ளாகி இருக்கின்றார். ஒருவகையில், அவரின் இவ்வாறான செயற்பாடுகள், அவரின் ஆளுமை மீதான கேள்விகளை எழுப்புவதுடன், நம்பகத் தன்மையற்ற நிலையை, அவர் மீது ஏற்படுத்துகின்றது. அவ்வாறான நிலையில், நாட்டு மக்களுக்குத் தன்னுடைய நிலைப்பாடுகளை வெளிப்படுத்திக் கொண்டு உரையாற்றுவதால் மாத்திரம், விடயங்களைக் கடந்துவிட முடியும் என்பது அபத்தமானது. அது, அவரின் மீதான அழுக்குகளை என்றைக்குமே கழுவிவிடாது.

தேர்தல் அரசியலில் வாக்குறுதிகள் என்பது வகைதொகையின்றி வழங்கப்படும் ஒன்றுதான். தெற்காசிய நாடுகளில் அதுதான் இயல்பு. ஆனால், மாற்றங்கள் பற்றிய அறிவித்தல்கள், தங்களைத் தேவ தூதர்களாகக் கட்டமைத்துவிட்டு, அவற்றிலிருந்து பிரளும் தன்மைகளை, மக்கள் அவ்வளவு இலகுவாக மறந்துவிடுவதில்லை.

அவ்வாறானதொரு கட்டத்தை, மைத்திரி இன்றைக்குச் சந்தித்து நிற்கிறார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பைச் செய்துவிட்டு, முதலாவது பதவிக்காலத்துக்குப் பின்னர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அவர் மீண்டும் மீண்டும் மக்களிடம் கூறியிருக்கின்றார்.

நல்லாட்சிக்கான அழைப்பை விடுத்தவர்களில் முக்கியமானவரான மறைந்த சோபித தேரரின் ஆன்மா மீதும் அவர் சத்தியம் செய்திருக்கின்றார். அப்படிப்பட்ட ஜனாதிபதியின் இன்றைய செயற்பாடுகள் அனைத்துமே, தன்னுடைய தனிப்பட்ட அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டதாக உணரப்படுகின்றது.

மாற்றத்துக்கான கோலத்தின் வழி, நல்லாட்சி அடையாளத்தைப் பெற்றுக்கொண்ட மைத்திரி, சக பயணிகளான ரணிலையும் அரசாங்கத்தையும் தூக்கி எறிந்துவிட்டு விழுந்திருப்பது, ஜனநாயகப் படுகுழியிலாகும். (ரணிலோ, நல்லாட்சி அரசாங்கமோ புனிதத் தன்மையோடு நோக்கப்பட வேண்டியதில்லை. ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் தாண்டவமாடத்தான் செய்கின்றன.

அந்த நிலைக்கு, கூட்டுப்பொறுப்பேற்க வேண்டிய மைத்திரி, பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு, தப்பிக்க நினைப்பது அபத்தமானது.) ராஜபக்ஷக்களின் ஒத்துழைப்போடு, மீண்டும் ஜனாதிபதியாகி விடலாம் என்கிற மைத்திரியின் நினைப்பு, அவ்வளவு இலகுவான ஒன்றாக இருக்கப்போவதில்லை. அதை, ராஜபக்ஷக்களும் இலகுவாக ஏற்படுத்திக் கொடுத்துவிடப்போவதில்லை.

அரசியல் ஒரு சதுரங்கம். அங்கு தக்க தருணத்தில் சரியான காய்களை நகர்த்தியிருக்க வேண்டும். ஆனால், இலங்கை போன்றதொரு பூகோள முக்கியத்துவமுள்ள நாட்டில், சதுரங்கக் காய்களை உள்நாட்டிலுள்ள கட்சிகள், தலைவர்கள் மாத்திரம் நகர்த்துவதில்லை.

பிராந்திய வல்லரசுகளும் மேற்கு நாடுகளும் சீனாவும் கூட, காய்களை நகர்த்தும் கருவிகளாக இருக்கின்றன. விரும்பியோ விரும்பாமலோ வெளித்தலையீடுகள் அற்ற நிலைமை ஒன்றை இப்போதைக்கு இலங்கையால் ஏற்படுத்திக் கொள்ள முடியாது.

அவ்வாறானதொரு சமயத்தில், ராஜபக்ஷக்களோடு இணைவதன் மூலமே தன்னுடைய பதவியை எதிர்காலத்திலும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று மைத்திரி நம்புவது எவ்வளவு அபத்தம். அதுவும், வெளித்தலையீடுகளின் உச்சபட்ச காய்நகர்த்தல்களின் ஊடு, ஜனாதிபதி வேட்பாளராக வந்த மைத்திரிக்கு, அது தெரியாமல் இருக்கவும் வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட நிலையில், அவர் இன்றைக்கு பயணிக்கின்ற வழி, சிக்கலானது. அது, அவரை மாத்திரமல்ல, மக்களையும் நெருக்கடிகளின் பக்கத்தில் கொண்டு சேர்க்கின்றது.

அரசமைப்புக் குழப்பத்தை மாத்திரமல்ல, இன்னொரு வகையில் இராணுவ ரீதியிலான நெருக்கடியொன்றையும் மைத்திரி ஏற்படுத்த முயல்கின்றார். அரசமைப்பு,  நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வழி, தமது உரிமைகளை அடைய நினைக்கும் தரப்புகளை, இராணுவ ரீதியாகக் கையாளும் கட்டத்தை அவர் அடைவாராயின், அது, அரசமைப்பு,  ஜனநாயக விழுமியங்கள் மீதான தொடர் அச்சுறுத்தலுக்குக் காரணமாகிவிடும்.

இலங்கையை, இன்னொரு பாகிஸ்தானாகவோ, பங்களாதேஷாகவோ மாற்றிவிடும்.
இலங்கையில் இனத்துவ அரசியல் மூர்க்கம் பெற்ற புள்ளியிலிருந்து, தமிழ் மக்களை அடங்கி ஒடுக்குவதற்காக, இராணுவத்தைத் தென்னிலங்கை பயன்படுத்தி வந்திருக்கின்றது. வடக்கு – கிழக்கில் இன்னமும் அதன் ஆதிக்கம் தொடர்கின்றது. ஆனால், இராணுவ ஆதிக்கம் தென்னிலங்கையில் நீடிப்பதற்கோ, ஆட்சியாளர்களை மேவிச் செல்வதற்கோ, ஆட்சியாளர்கள் இதுவரை அனுமதித்தது இல்லை.

அப்படிப்பட்ட சூழலில், நாடாளுமன்றத்தை நாளையோ, சில தினங்களிலோ கூட்டும் முடிவை, சபாநாயகர் எடுத்து, அதை நிறைவேற்ற எத்தனிக்கும் பட்சத்தில், நாடாளுமன்றத்தை இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் முடிவை ஜனாதிபதி எடுப்பாராக இருந்தால், அது, இராணுவச் சதிப்புரட்சிகளுக்கான ஏற்பாட்டை எதிர்காலத்தில் ஏற்படுத்திக் கொடுத்துவிடும்.

இராணுவத்திலுள்ள ஒவ்வோர் அதிகாரியும் தன்னுடைய அதிகார வரம்புகளுக்கு அப்பால், ஆட்சியைப் பிடிப்பது சார்ந்து சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். அது, நாட்டு மக்களின் ஒட்டுமொத்த இறைமையையும் குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானது.

அதை நோக்கியும் மைத்திரிபால சிறிசேன பயணிக்கிறாரோ என்கிற அச்சமே மேலிடுகின்றது. ஏனெனில், அவரின் அண்மைய நடவடிக்கைகள் அதனைத்தான் மீண்டும் மீண்டும் பிரதிபலிக்கின்றன.

Leave a comment