வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிங்கள பொலிஸாரின் பாதுகாப்பினை கோருகின்றனரே தவிர தமிழ் பேசுகின்ற பொலிஸாரை அல்ல இதற்க்கு காரணம் நம்பிக்கையீனம் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி அம்பாள்குளம் பாடசாலையில் இடம்பெற்ற தரம் ஜந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் பேசுகின்ற பொலிஸாரை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்புவது கிடையாது காரணம் தமிழ் பேசுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது இந்த பிரதிநிதிகளுக்கு நம்பிக்கையில்லை என்பதே. மேலும் அரசியல் வாதிகள் மக்களிடம் உண்மையை பேசுவது கிடையாது அவர்கள் தங்களின் தேர்தல் வெற்றிக்களுக்காக தவறான கருத்துக்களை பேசி வருகின்றார்கள் எனத் தெரிவித்த குரே.
படித்த பணம் படைத்த தமிழர்கள் கொழும்பில் வெள்ளவத்தை போன்ற இடங்களில் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர். திருமணமும் செய்துகொண்டுள்ளனர் ஆனால் ஏனைய தமிழ் மக்கள் அவ்வாறு நடந்துகெண்டால் அதனை தவறு என்கின்றனர். இதுதான் இவர்களின் நிலைப்பாடு,
வடக்கு மக்களும் தென்னிலங்கை மக்களும் தமிழ் சிங்கள மக்களும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வாழ்வதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே எனது ஒரே ஒரு நோக்கம் என்றும் தெரிவித்தார்.
அதிகாரம் வேண்டும் அடையாளம் வேண்டும் என்று போராடும் அதே தருணத்தில் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்தி கொண்டுவர முயலவேண்டும். அப்போது மக்களின் வாழ்வில் சுபிட்சம் நிலவும்.
நானும் எனது தாய் தந்தையரும் மலையகத்தில் தேயிலைத் தோட்டத்திலே பணிபுரிந்தவர்கள் அம்மக்களின் வேதனை துக்கம் அனைத்தையும் சிறுவயது முதலே நான் நன்கறிந்தவன் அந்த வகையில் இங்கு வாழ்கின்ற அங்கிருந்து வந்த மக்களின் மனநிலைகளை அறிந்து கொண்டுள்ளேன். இங்கே வாழ்ந்த இந்த மாணவர்களின் மக்களின் வளர்ச்சிக்காக என்னாலான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க எண்ணியுள்ளேன்.என தெரிவித்தார்.