கடந்த சில தினங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையையடுத்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி நாட்டு மக்களால் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்களுடைய எதிர்பார்ப்பினை எதிர்காலத்தில் நிறைவேற்றுவேன். எந்தக் கட்சியாக இருந்தாலும் நாட்டு மக்களுக்கு சேவை செய்யக்கூடிய கொள்கை தொடர்பிலேயே சிந்திக்க வேண்டும். இந்த நாட்டிலேயே எவரும் ஏற்றகாத அரசியல் சவாலை தான் ஏற்றதாகவும், தனது குடும்பமும் அந்த ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த 26 ஆம் திகதி அதனை விட தீர்மானமிக்கதொரு தீர்மானத்தை தான் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டு மக்களை கருத்திற்கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் 2015 ஆம் ஆண்டு எதிர்பார்த்த சீரான அரசியலுக்கு மாறாக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சொகுசு தரப்பினருக்கு தேவையான வகையிலேயே ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டதாகவும் நல்லாட்சி அரசாங்கத்தின் கோட்பாடுகளுக்கு எதிராகவும் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டதாகவும் அதன் பின்னர் நாட்டின் ஊழல் மோசடிகள் அதிகரித்தமையின் காரணமாக நாம் எதிர்பார்த்த கொள்கைகளை நிறைவேற்ற முடியாது போனதாகவும் கூறினார்.
ரணில் விக்கிரமசிங்க தனியான தீர்மானங்களை எடுத்தமையினால் அரசியல் பிரச்சினை ஏற்பட்டு அதன் மூலம் பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் இந்த பின்புலத்திலேயே தான் வேறு வழிகள் இல்லாமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து, புதிய அரசாங்கத்தை நியமித்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதேபோன்று மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் காரணமக நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய அமைச்சரவை நியமனம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
எனக்கு வேறு வழியில்லாது போனதாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உதவிகோரி அவரை பிரதமராக்கினேன். அரசாங்கத்தின் நியமனம் அரசியலமைப்பின் படி இடம்பெற்றது.