முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரத்தில் உண்மை இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடமுள்ளதாகவும், இதற்கு சர்வதேச பாதுகாப்பு வழங்கப்படுமாக இருந்தால் தான் ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘முன்னாள் போராளிகள் பலர் என்னுடன் தொடர்பு கொண்டு விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறார்கள். அவ்வாறானவர்களில் சிலருக்கு ஏற்றப்பட்ட விஷ ஊசிகளுக்கு எதிராக சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ஆனால் அவற்றை வெளிப்படுத்தக் கூடிய சூழல் தற்போது இல்லை. வைத்திய பரிசோதனை மேற்கொண்ட வைத்தியராகினும்சரி பாதிக்கப்பட்ட முன்னாள் போராளியாகினும்சரி அதுதொடர்பில் வெளிப்படையாக பேசினால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும்.
எனவே, சம்மந்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் அவர்கள் உண்மைகளை வெளிப்படுத்த தயாராக இருக்கின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.