தனது உயிராபத்து குறித்து உணர்வுபூர்வமாக கருத்துரைத்தாராம் ஜனாதிபதி சம்பந்தன் தெரிவிப்பு

300 0

தனக்கு ஏற்படுத்தப்படவிருந்த உயிராபத்து குறித்து உணர்வு பூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்துரைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

 

தாம் முன்வைத்த விடயங்கள் குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் உறுதியான தீர்மானத்தினை வெளிப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது தேசியப் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை முழமையாக நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் கூட்டமைப்புக் கொண்டுள்ள அதீத கரிசனை தொடர்பில் சம்பந்தனால் எடுத்துக் கூறப்பட்டதோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அது தொடர்பில் கூட்டான நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அதனையடுத்து தமக்கு உறுதியான உத்தரவாதத்தினை வழங்க வேண்டும் என்று சம்பந்தன் கோரியதோடு தற்போதைக்கு தாம் எவ்விதமான இறுதியான நிலைப்பாட்டினை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து திடீரென மஹிந்தராஜபக்ஷவுடன் கைகோர்த்தமைக்கான காரணம் தொடர்பில் சம்பந்தன் வினாக்களை தொடுத்தபோது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு ஏற்படவிருந்த உயிராபத்து குறித்து மிகவும் உணர்வு பூர்வமாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாகவும் அதற்கான சாட்சியங்கள் காணப்படுவதாகவும் ஜனாதிபதி கூறியதாக சம்பந்தன் தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதியுடன் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதென்றும் அதன்போது தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment