ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தனித்தனியாகச் சந்தித்துள்ளார்.
அத்துடன் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டள்ள மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளார்.
புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகிய பிரதான இரு விடயங்களை முன்னிலைப்படுத்தி கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.
மேலும் கூட்டமைப்பு நபர்களை முன்லைப்படுத்தவில்லை என்பதோடு அரசியலமைப்பு மீறப்படாது பாராளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இறுக்கமான நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும் மூன்று தரப்பினர்களுடனும் சம்பந்தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
மத்திய அரசாங்கத்தில் நடைபெற்றுள்ள திடீர் மாற்றங்கள் குறித்து கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் கருத்து வெளியிடுகையில்,
நாட்டின் அரசியலில் தற்பொழுது முக்கியமானதொரு கட்டம் ஏற்பட்டுள்ளது. துமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாம் இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முற்பட்டபோதும் பாராளுமன்ற அமர்வு வெள்ளிக்கிழமையுடன் நிறைவு அடைந்ததால் எமது கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமது மாவட்டங்களுக்குச் சென்றுவிட்டனர். இருப்பினும் நான் அவர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தேன்.
எம்மைப்பொறுத்தவரையில் நாட்டில் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் கூடிய கவனத்தினைக் கொண்டுள்ளதோடு சில முக்கிய கருமங்கள் தொடர்பில் நாம் அதீதமாக அக்கைறையையும் கொண்டிருக்கின்றோம். குறிப்பாக பாராளுமன்றம் ஒரு அரசியல் நிர்ணய சபையாக ஏகமனதான அங்கீகாரத்துடன் மாற்றப்பட்டு தேசிய பிரச்சினை உட்பட முக்கிய விடயங்களை உள்ளடக்கிய புதிய அரசியல் சாசனத்தினை உருவாக்கும் செயற்பாடுகள் பல கட்டங்களைக் கடந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின இணை அனுசரணையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆத்தீர்மானத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக சில விடயங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மேலும் முன்னேற்றங்கள் அவசியம் என்பதுடன் அந்தக் கருமங்கள் தடையின்றி தொடர்ச்சியாக தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதும் எமது உறுதியான நிலைப்பாடாகின்றது. ஆகவே இந்த விடயங்களில் முக்கியமான கவனத்தினைக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.
எம்மைப்பொறுத்தவரையில் நாம் யாரை ஆதரிக்கின்றோம் என்றெல்லாம் நிலைப்பாடெடுக்க தற்போது அவசியம் எற்படவில்லை. நபர்களைப் பற்றிய நாம் அதிகளவில் அக்கறை கொள்ளவில்லை. மேற்படி கருமங்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பது பற்றியே அதிகளவில் கவனத்தினை செலுத்தி ஆராய்ந்து வருகின்றோம். அவ்வாறான நிலையில் இந்த நாட்டில் ஜனநாயத்தினை மீறாது செயற்பட வேண்டும்.
அரசியல் சாசனம் மதிக்கப்பட வேண்டும். அரசியல் சாசனம் பின்பற்றப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. யார் பிரதமர் என்பதை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினத்தவரின் நம்பிக்கையை, ஆதரவை பெற்றவரே பிரதமராகுவதற்கு தகுதியானவராக உள்ளார்.
ஆகவே ஜனநாயகத்திற்கு மாறாக எந்தவிதமான நடவடிக்கைகள் ஊடாகவும் இந்த விடயத்திற்கு தீர்வினை வழங்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளோம். பெரும்பான்மையை நிருபிக்க வேண்டியவர்கள் சார்ந்து எவ்விதமான நிலைப்பாடுகளையும் நாம் எடுக்கவில்லை என்றார்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் நடைபெற்ற தனித்தனியான சந்திப்பு தொடர்பாகவும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான தொலைபேசி உரையாடல் தொடர்பாகவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கருத்துக்களை வெளியிட்டார்.
ஜனாதிபதி மைத்திரி-சம்பந்தன் சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், கூட்டமைப்பின் தலைவருக்குமான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதன்போது ஜனநாயகம், பாதுகாக்கப்படுவது உட்பட முக்கிய விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக பாராளுமன்றத்திற்கான மீயுயர் தன்மைக்கு மதிப்பளித்து அரசியலமைப்பினை மீறாத வகையில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுமக்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்றும் சம்பந்தன் ஜனாதிபதியிடத்தில் கேட்டுக்கொண்டதாக தெரியவருகின்றது.
ரணில் – சம்பந்தன் சந்திப்பு
ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று 11.30மணியளவில் நடைபெற்றது. இச்சந்திப்பு தொடர்பாக சம்பந்தன் கூறுகையில்,
ரணில் விக்கிரமசிங்க தமக்கான ஆதரவை நல்குமாறு கோரினார். அச்சமயத்தில், நாம் முன்நிலைப்படுத்தும் இரு பிரதான கருமங்கள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எடுத்துரைத்தேன்.
பாராளுமன்றத்திலேயே இந்த விவாகரம் தீர்க்கப்பட வேண்டும். நாம் இந்த விடயத்தில் நிதானமாக நடப்போம் என்றும் குறிப்பிட்டேன். எந்த செயற்பாடுகளும் அரசியல் சாசனத்தினை மீறதாக வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன் என்றும் குறிப்பிட்டார்.
மஹிந்த-சம்பந்தன் உரையாடல்
இதேவேளை தொலைபேசி ஊடாக புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற உரையாடல் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்திருந்த சம்பந்தன், மஹிந்த ராஜபக்ஷ என்னை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டார்.
என்னுடைய சுகநலம் தொடர்பாக விசாரித்திருந்தார். அதனை அடுத்து அரசியலில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் கூறியதோடு தனது தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவினை நல்குமாறும் கேட்டார்.
அச்சமயத்தில் பதிலளித்த நான், உங்களுக்கு நாம் ஆதரவினை நல்கமாட்டோம் என்று தீர்க்கமாக தீர்மானிக்கவில்லை. நாம் பிரதான இரு கருமங்கள் பற்றி அதீத கவனத்தினைக் கொண்டிருக்கின்றோம்.
ஆரசியலமைப்பு செயற்பாடுகள், ஐ.நா தீர்மானம் மிக முக்கியமானவை என்று குறிப்பிட்டேன். அச்சமயத்தில் என்னை நேரில் சந்தித்து அந்த விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடவிருப்பதாகவும் விரைவில் அந்தச் சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்போது, நாம் தனிப்பட்ட நபருக்காக எந்தவிதமான தீர்மானங்களை எடுத்து ஆதரவளிக்க முடியாது. கொள்கை ரீதியிலேயே ஆதரவளிப்பதற்கான தீர்மானங்களை எடுக்க முடியும். ஆகவே கூடிப்பேசுவோம் என்றேன். அத்துடன் அந்த உரையாடல் நிறைவுக்கு வந்திருந்தது.
இலங்கை தமிழரசுக்கட்சியின்(தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்) 16பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.