நீர் அடித்து நீர் விலகாது: டிடிவி அணியினருக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அழைப்பு

278 0

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை விட்டுள்ளனர்.

அதிமுகவிலிருந்து பிரிந்துச்சென்ற டிடிவி அணியில் உள்ள 18 தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் பதவி உயர் நீதிமன்ற தீர்ப்பால் பறிபோனது. இது டிடிவி அணியினருக்குள் லேசான சலசலப்பை உண்டாக்கியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

மேல்முறையீட்டிற்காக உச்சநீதிமன்றம் செல்வோம், அல்லது தேர்தல் அறிவிக்கப்பட்டால் போட்டியிடுவோம் என 18 பேரும் கூறினாலும் அவர்களை வளைத்துப்போட ஆளுங்கட்சித்தரப்பு முயல்வதாக கூறப்படுகிறது.

ஒற்றுமையாக இருப்பதாக மற்ற நிர்வாகிகள் கூறினாலும் டிடிவி அணியிலிருந்து குழப்பத்திலிருப்பவர்களை இழுக்கும் வண்ணம் ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் அறிக்கை வருமாறு:

“தவறான வழிநடத்தல், மனக்கசப்புகள் காரணமாக பிரிந்து சென்றவர்கள் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும்.

பிரிந்து சென்றவர்கள் உயர் நீதிமன்ற தீர்ப்பினை யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

சிறு சிறு மனக்கசப்புகள் காரணமாக மாற்று பாதையில் பயணிக்க சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணையுங்கள்.

கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளி விட்டு ஒன்றுபட வேண்டும். நீரடித்து நீர் விலகுவது இல்லை.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய மகத்தான மக்கள் இயக்கத்தில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையவேண்டும்.”

இவ்வாறு ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Leave a comment