அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் ஈரான் மீதான பொருளாதார தடை தீவிரமாக அமல் – டிரம்ப்

306 0

அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் ஈரான் மீதான பொருளாதார தடை தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம் ஆண்டு ஏற்படுத்தியது.

ஆனால் அந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக கூறி அமெரிக்கா சில மாதங்களுக்கு முன் அதிலிருந்து விலகியது.

அத்துடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது, விலக்கி கொள்ளப்பட்ட பொருளாதார தடைகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். மேலும், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் குறைத்துக்கொண்டு, நிறுத்தி விட வேண்டும், அப்படி செய்யாவிட்டால் அந்த நாடுகளும் பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டியது வரும் எனவும் அவர் எச்சரித்தார்.

இந்த நிலையில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “அணு ஆயுத ஒப்பந்தத்தை தொடர்ந்து, விலக்கிக்கொள்ளப்பட்ட ஈரான் மீதான எல்லா பொருளாதார தடைகளும் மீண்டும் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி முதல் தீவிரமாக அமலுக்கு வந்து விடும்” என அறிவித்தார்.

உலகின் முன்னணி பயங்கரவாத நாடு, உலகிலேயே மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகிற ஆயுதங்களை தயாரிக்க விட மாட்டோம் எனவும் டிரம்ப் உறுதிபட தெரிவித்தார்.

Leave a comment