மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை நீக்கம்

286 0

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் அமைப்புகள் மீது பாகிஸ்தானில் விதிக்கப்பட்ட தடை நீங்கியது.

மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி நுழைந்து 10-க்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 9 பேர், பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து, விசாரித்து, மரண தண்டனை விதித்து, அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது.

இந்த மும்பை தாக்குதலை, பாகிஸ்தானில் இருந்து கொண்டு, மூளையாக செயல்பட்டு நடத்தியவர் ஹபீஸ் சயீத். இவர் பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா, பலாஹ் இ இன்சானியத் அறக்கட்டளை ஆகிய அமைப்புகளின் நிறுவனர் ஆவார்.

மும்பை தாக்குதலை தொடர்ந்து ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்து, அவரது அமைப்புகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை செய்தது.

மேலும், ஹபீஸ் சயீத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அழுத்தம் தந்து வந்தது. அதைத் தொடர்ந்து, அவரை பயங்கரவாதி என அறிவித்து, அவரது அமைப்புகளை பாகிஸ்தான் அரசு தடை செய்தது.

இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு, கடந்த பிப்ரவரி மாதம் அவசர சட்டம் இயற்றியது. அதற்கு அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மம்னூன் உசேன் ஒப்புதல் வழங்கினார். அத்துடன் ஹபீஸ் சயீத் இயக்கங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்தது.

ஆனால் பாகிஸ்தான் அரசின் நடவடிக்கையை எதிர்த்து இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஹபீஸ் சயீத் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் அவர், “2002-ம் ஆண்டு, ஜமாத் உத் தவாவை தொடங்கினேன். தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொண்டேன். ஆனால், லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் ஜமாத் உத் தவாவின் கடந்த கால தொடர்பை வைத்து இந்தியா தொடர்ந்து அவதூறு பேசி வந்தது. இந்தியாவின் அழுத்தம் காரணமாகத்தான் 2009, 2017 ஆண்டுகளில் நான் பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டேன். ஜமாத் உத் தவாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது. அதன்பின்னர் பாகிஸ்தான் அரசும் தடை செய்து கண்காணிப்பில் வைத்தது. எனவே என் அமைப்புகள் மீது தடை விதித்து பாகிஸ்தான் அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இது, பாகிஸ்தான் இறையாண்மையை பாதிக்கிறது. அதை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறி இருந்தார்.

அந்த வழக்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் நீதிபதி அமீர் பரூக் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹபீஸ் சயீத் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் ராஜா ரிஸ்வான் அப்பாசி, சொகைல் வாராய்ச் ஆகியோர் ஆஜரானார்கள்.

அப்போது அவர்கள், “அவசர சட்டத்தை பாகிஸ்தானின் தற்போதைய அரசு நீட்டிக்கவில்லை. (அவசர சட்டத்தின் ஆயுள் 6 மாதம்தான்.) அதை வழக்கமான சட்டம் ஆக்குவதற்கு நாடாளுமன்றத்தில் மசோதாவும் தாக்கல் செய்யவில்லை. எனவே அவசர சட்டம் காலாவதியாகிவிட்டது” என கூறினர்.

பாகிஸ்தான் அரசு சார்பில் ஆஜரான துணை அட்டார்னி ஜெனரல் ராஜா காலித் மெக்மூது கான், அவசர சட்டம் காலாவதியாகிவிட்டதை உறுதி செய்தார்.

அதே நேரத்தில் அவசர சட்டம் காலாவதியானது குறித்து உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அறிக்கை அளிக்குமாறு ஹபீஸ் சயீத் வக்கீல் ராஜா ரிஸ்வான் அப்பாசி கேட்டபோது, துணை அட்டார்னி ஜெனரல் ராஜா காலித் மெக்மூது கான் மறுத்து விட்டார்.

இந்த விவகாரத்தில் தாக்கல் செய்த வழக்கில் ஒரு தரப்பாக உள்துறை செயலாளர் குறிப்பிடப்படாத வரையில், தான் இதில் அறிக்கை அளிக்க முடியாது என்று அவர் கூறி விட்டார்.

அதைத் தொடர்ந்து நீதிபதி அமீர் பரூக், அவசர சட்டம் காலாவதியாகி விட்டதால் இந்த வழக்கு பலனற்று போகிறது என கூறி, அதை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

அத்துடன், ஒரு வேளை அவசர சட்டத்தை அரசு நீட்டித்தால் அதற்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு வழக்குதாரர் ஹபீஸ் சயீத்துக்கு உரிமை உள்ளது என நீதிபதி குறிப்பிட்டார்.

எனவே ஹபீஸ் சயீத்தின் அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் விதிக்கப்பட்ட தடை நீங்கியது. அதே நேரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த தடை நீடிக்கிறது.

Leave a comment