திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப கட்டுமான பணி 6 மாதத்தில் நிறைவடையும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
திருச்செந்தூரில் நடந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பத்திரிகை துறையில் முடிசூடா மன்னராக திகழ்ந் தார். பத்திரிகை துறையில் மட்டும் அல்லாமல் கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளிலும் சிறப்பாக பணியாற்றி முத்திரை பதித்தார். அவருடைய புகழுக்கு மகுடம் சூட்டும் வகையில், முதல்- அமைச் சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் சொந்த ஊரான திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கப் படும் என்று அறிவித்தார்.
6 மாதத்தில் நிறைவடையும்
அதன்படி மணிமண்டபத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு, முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டி உள்ளார். இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த மணிமண்டபம் அமைக்கும் பணி இன்றே தொடங்கி விட்டது.
இந்த பணி இன்னும் 6 மாத காலத்திற்குள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு, திறப்பு விழா நடைபெறும். இந்த மணிமண்டபத்தில் பூங்கா, நூலகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கான சாய்வு தள வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.