கிளிநொச்சியில் இயங்கும் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் தொடர்பாக காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 15 வயதுச் சிறுமி ஒருவரை கர்ப்பமாக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இவரை கிளிநொச்சி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவரது பெயரை சிறுமி நீதிபதி முன்னிலையில் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த சுயாதீன ஊடகவியலாளர் விரைவில் கைதுசெய்யப்படவுள்ளார் என கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் சமூகத்தில் கதையைப் பரப்பியுள்ளார். அத்துடன், குறித்த செய்தியை தொலைபேசியூடாகவும் தனது நண்பர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனால், குறித்த சுயாதீன ஊடகவியலாளர் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பு காரணமாக ஊடகப் பரப்பிலும், சமூகத்தில் அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான தகவலை பரப்பி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த சுயாதீன ஊடகவியலாளர் கிளிநொச்சி நீதவானின் பதிவாளருடன் தொடர்புகொண்டு விடயம் தொடர்பாகத் தெரிவித்தபோது அவரது பெயர் அங்கோ பதியப்படவில்லையென பதிவாளர் தெரிவித்துள்ளார்.
எனவே, தனது முறைப்பாட்டை காவல்நிலையத்தில் பதிவுசெய்துவிட்டு நீதிமன்றத்தினூடாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு செய்துள்ளார்.