இருவழிப்பாதை பணிகள் வருகிற மார்ச் மாதம் முடிந்ததும் திருச்சியில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என கோட்ட ரெயில்வே மேலாளர் ஏ.கே. அகர்வால் கூறியுள்ளார்.திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஏ.கே. அகர்வால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் கீழ் திருச்சி கோட்ட ரெயில்வேயில் ‘சொச் பாரத் ரெயில்’ திட்டத்தின் கீழ் கடந்த 17-ந்தேதியில் இருந்து தூய்மை பணிகள் நடந்து வருகிறது. இதன்படி ரெயில் நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், ரெயில்களில் தூய்மை பணிகள், சுத்தமாக தண்ணீர் வழங்குவது, தரமான உணவு வழங்குதல் போன்றவை நடந்து வருகிறது. வருகிற 25-ந்தேதி வரை ஒரு வார காலத்திற்கு இவை தொடரும்.
நிர்பயா பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை கருதி திருச்சி கோட்டத்தில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, கும்பகோணம், விழுப்புரம் உள்பட 9 ரெயில் நிலையங்களில் சுழலும் கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட இருக்கிறது. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகளின் நலன் கருதி பிரீபெய்டு ஆட்டோ வசதியை ஏற்படுத்துவதற்காக வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மாநகர போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் பிரீபெய்டு ஆட்டோ வசதி ஏற்படுத்தப்படும்.
நடப்பு நிதியாண்டில் திருச்சி கோட்டத்தில் இருந்து 8.5 டன் நிலக்கரி எடுத்து செல்லப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும். இதே போல் பயணிகள் போக்குவரத்தின் மூலமான வருவாயும் கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. திருச்சியில் இருந்து காரைக்கால் வரையிலான ரெயில் பாதையை மின் மயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். திருச்சி- தஞ்சை இடையே அமைக்கப்பட்டு வரும் இருவழிப்பாதை பணிகள் இன்னும் 9 மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இருந்து விழுப்புரம் வரை இருவழிப்பாதையில் ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம்- திருச்சி இடையிலான இருவழிப்பாதை பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இன்னும் 70 கிலோ மீட்டர் பணிகள் தான் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் வருகிற 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்து விடும். அதன் பின்னர் தான் திருச்சியில் இருந்து சென்னைக்கு இரவு நேர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட கூடுதல் ரெயில்கள் இயக்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். திருச்சியில் இருந்து ராஜஸ்தானுக்கு நேரடி ரெயில் இயக்குவதற்கான திட்டம் எதுவும் இப்போது இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.