சென்னை ரெயில் பெட்டி தொழிற்சாலையில் ராணுவத்துக்கான அதிநவீன வசதியுடன் தயாரிக்கப்பட்ட சமையல் அறை ரெயில் பெட்டியை மத்திய மந்திரி அர்ப்பணித்து வைத்தார்.
பாதுகாப்பு அமைச்சகம் ராணுவ பயன்பாட்டுக்காக நவீன வசதிகளுடன் 32 சமையல் அறை ரெயில் பெட்டிகளை தயாரித்து கொடுக்குமாறு சென்னை ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையிடம் (ஐ.சி.எப்.) கடந்த ஆண்டு ஆர்டர் கொடுத்திருந்தது. அதற்கான பணிகள் முடிந்து முதல் ரெயில் பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியில் தனித்தனியாக 2 சமையல் அறைகள் உள்ளன.
அதில் தலா 4 கியாஸ் அடுப்புகள், பாத்திரம் கழுவும் எந்திரம், சப்பாத்திக்கு மாவு பிசையும் எந்திரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குழாய்களில் குடிநீர் வராத சமயத்தில் பயன்படுத்தும் வகையில் தண்ணீர் அடிப்பதற்காக கை பம்பு, 4,390 லிட்டர் தண்ணீர் சேமிக்கும் திறன் கொண்ட தொட்டிகள், ஜெனரேட்டர் என பல்வேறு வசதிகள் உள்ளன.
இது தவிர ரெயில் பெட்டியின் வெளியே குடிநீர் மற்றும் சாப்பிட்டு விட்டு கை கழுவுவதற்காக குழாய்கள், உணவு பொருட்கள் வைக்கும் அறைகள், தீயணைப்பு தடுப்பு கருவிகள், சமையல் அறையில் இருந்து புகை வெளியே செல்லும் வசதி என பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த ரெயில் பெட்டியை சென்னை ரெயில் பெட்டி தொழிற்சாலையில் மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜன் கோஹைன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பின்னர் அந்த ரெயில் பெட்டியை ராணுவத்துக்கு அவர் அர்ப்பணித்து வைத்தார். விழாவில் ரெயில் பெட்டி தொழிற்சாலையின் பொதுமேலாளர் எஸ்.மணி, செயலாளர் கே.என்.பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ராணுவத்துக்கு இன்னும் அதிநவீன 31 சமையல் அறை ரெயில் பெட்டிகள் மார்ச் மாதத்துக்குள் தயாரித்து கொடுத்து விடுவோம். ஒரு பெட்டி தயாரிப்பதற்கு ரூ.3 கோடியே 30 லட்சம் செலவாகியுள்ளது. இதேபோல் பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஆண்டு குளிர்சாதன வசதியுடைய 40 இரண்டடுக்கு ஏ.சி. பெட்டிகள் தயாரிக்குமாறு ஆர்டர் கொடுத்திருந்தது. தற்போது வரை 34 ரெயில் பெட்டிகள் தயாரித்து கொடுத்து விட்டோம். அடுத்த மாதத்துக்குள் மீதம் உள்ள பெட்டிகளை தயாரித்து கொடுத்து விடுவோம் என்றனர்.