முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தையொட்டி கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணையை நம்பி தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் உள்ளனர். கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் தற்போது முதல்போக நடவு பணியை முடித்து நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன.
எனினும் 2-ம் போக சாகுபடிக்கு வடகிழக்கு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே விவசாய பணியை தொடங்க முடியும். தற்போது மழை இல்லாததாலும், அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதாலும் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து 112.70 அடியாக உள்ளது. இதனால் நேற்று வரை 500 கனஅடி திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது 300 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு 130 கனஅடிநீர் வருகிறது.
வைகை அணை நீர்மட்டம் 27.56 அடியாக உள்ளது. 85 கனஅடிநீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்கு மட்டும் 60 கனஅடி திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணை நீர்மட்டம் 35.60 அடி, அணைக்கு வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 26.56 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
தேக்கடியில் மட்டும் 3.2 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. கம்பம், கூடலூர், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் சாரல்மழை பெய்து வருகிறது. எனவே இதுதொடர்ந்தால் விவசாயத்திற்கு ஏற்றநிலை இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.