செப்டம்பர் 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை, வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு 10 நாட்கள் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேற்பார்வை குழு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு கடந்த 5-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக இரு மாநிலங்களும் காவிரி மேற்பார்வை குழுவை அணுகலாம் என்றும் கூறியது.
இதைத் தொடர்ந்து டெல்லியில் 19-ந் தேதி நடைபெற்ற காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் கர்நாடகம் 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 10 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வில் தமிழக அரசின் இடைக்கால மனுவின் மீது நடைபெற்ற விசாரணையின்போது காவிரி மேற்பார்வை குழுவின் உத்தரவை தாங்கள் ஏற்க முடியாது என்றும், இதுபோல உத்தரவு பிறப்பிக்க காவிரி மேற்பார்வை குழுவுக்கு அதிகாரம் இல்லை என்றும் தமிழக அரசு தரப்பிலும், கர்நாடக அரசு தரப்பிலும் ஆட்சேபணை எழுப்பப்பட்டது. இரு தரப்பும் மூன்று நாட்களுக்குள் தங்கள் ஆட்சேபணையை தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த உத்தரவை தொடர்ந்து தமிழக அரசு இதுதொடர்பான மனுவை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும். கர்நாடக அரசின் பிடிவாத போக்கினால் தமிழகத்தில் காவிரி படுகையில் சம்பா சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்கு உரியதாகி விடும்.
எனவே, காவிரி மேற்பார்வை குழு பரிந்துரை செய்துள்ள தண்ணீர் அளவு எந்த வகையிலும் போதுமானதாக இல்லை. அக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் எடுத்துக்கொண்டாலும் தமிழகத்துக்கு ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை மேலும் 17.5 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும்.
இந்நிலையில் காவிரி மேற்பார்வை குழுவின் உத்தரவில் கூறியுள்ளபடி வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரை பத்து நாட்களுக்கு திறந்து விடுவதாக பிறப்பித்த உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த உத்தரவு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மீறும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.அதே போல, கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உள்ளிட்ட சில மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் இதுபோன்று தண்ணீரை திறந்து விடுமாறு கூறும் காவிரி மேற்பார்வை குழுவின் உத்தரவுக்கு ஆட்சேபம் தெரிவிப்பதாக கூறி கர்நாடக அரசு தனது மனுவை தாக்கல் செய்து உள்ளது.