ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு விவகாரத்தில் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் மடிக் கணினியில் இருந்து சந்தேகத்துக்கு இடமான சில சான்றுகள் சி.ஐ.டி.க்கு கிடைத்துள்ளன.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிச் மா அதிபருக்கு சொந்தமான அலுவலக மடிக் கணியில் ரசிகா சஞ்ஜீவனீ எனும் பெயரில் பயன்படுத்தப்பட்டுள்ள போலி முகப் புத்தக கணக்கை மையபப்டுத்தி இந்த சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அந்த போலி கணக்கூடாக அவர் யாருடன் உரையாடினார், என்ன உரையாடினார் என்பதை வெளிப்படுத்த மடிக் கணினியை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்ப சி.ஐ.டி. நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவின் அனுமதியைப் பெற்றுக்கொண்டது.
ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்யும் விதமாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தொலைபேசியில் கலந்துரையாடியதாக கூறப்படும் விடயம் தொடர்பில், சி.ஐ.டி. முன்னெடுக்கும் விசாரணைகளில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள இந்தியரை நேற்று நீதிமன்றில் ஆஜர்ச் செய்து, குறித்த சதி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகளின் தற்போதைய நிலைமையை விளக்கும் விதமாக 60 பக்க சிறப்பு அறிக்கையை சமர்ப்பித்தே இந்த அனுமதியை சி.ஐ.டி. பெற்றது.
அத்துடன் ஏற்கனவே அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பட்ட இந்த விவகாரத்தின் முறைப்பாட்டாளர் பொலிஸ் உளவாளி நாமல் குமாரவின் தொலைபேசியில் பல தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதால், அதனை அந்த தொலைபேசி உற்பத்தி செய்யப்பட்ட ஹொங்கொங் நாட்டுக்கே அனுப்பி அந்த தகவல்களை மீளப் பெறவும் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு குரல் சோதனைக்காக அனுப்பப்பட்ட 124 குரல் பதிவுகளில் 123 இல் உள்ள குரல்கள் நாலக சில்வா மற்றும் நாமல் குமாரவினுடையது என்பதை அரச இரசாயன பகுப்பயவு திணைக்களம் உறுதி செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.