அணு ஆயுத ஒப்பந்த விவகாரம்: ரஷியா, அமெரிக்கா பிரச்சினைகளை பேசித்தீர்க்கும் – ஐ.நா. சபை நம்பிக்கை

266 0

அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவும், ரஷியாவும் பேசித் தீர்த்துக்கொள்ளும் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ரஷியாவுடன் 1987-ம் ஆண்டு செய்து கொண்ட ஐ.என்.எப். ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிற நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்ளப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 20-ந் தேதி அதிரடியாக அறிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தை மீறி ரஷியா செயல்படுவதாக குற்றம் சாட்டி, இந்த முடிவை டிரம்ப் அறிவித்தது உலக அரங்கை அதிர வைத்துள்ளது. இது ஆயுதப்போட்டிக்கு வழிவகுக்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால் இந்தப் பிரச்சினையை அமெரிக்காவும், ரஷியாவும் பேசித் தீர்த்துக்கொள்ளும் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவரது செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில், “ ஐ.என்.எப். ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா கூறி உள்ள கருத்தை ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அறிந்துள்ளார். அதே நேரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை இரு நாடுகளும் பேசித் தீர்த்துக்கொள்ளும் என்று அவர் நம்பிக்கை வைத்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக மாஸ்கோ போய்ச் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a comment