இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது!

252 0

இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது. பாதுகாப்பை உறுதிப்படுத்த கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னை பல்லாவரம் சரகத்தில் 450 சிசிடிவி கேமராக்கள் உட்பட பரங்கிமலை காவல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1014 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தொடங்கி வைத்தார்.

குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்யவும் சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. மேலும், பல குற்றச் சம்பவங்கள், அசம்பாவிதங்கள், வாகன விபத்துக்கள் மற்றும் வன்முறை சம்பவங்களின்போது உண்மை தன்மையை அறிந்து கொள்வதற்கு சிசிடிவி கேமரா காட்சிகள் பெரிதும் உதவியுள்ளன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிசிடிவி கேமராக்களை சென்னை பெருநகர் முழுவதும் பொருத்தி, குற்றங்கள் நடவாமல் தடுப்பதற்கும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், சென்னை பெருநகர் முழுவதும் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் கேட்டுக் கொண்டார்.

அதன்பேரில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிசிடிவி கேமராக்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு சென்னை பெருநகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, இன்று மாலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன், பழைய பல்லாவரம், பெருமாள் நகர், 200 அடி ரேடியல் சாலையிலுள்ள தனியார் மண்டபத்தில், பல்லாவரம் காவல் சரக எல்லையில் S-5 பல்லாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 150 சிசிடிவி கேமராக்கள் மற்றும் சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 300 சிசிடிவி கேமராக்கள் என மொத்தம் 450 சிசிடிவி கண்காணிப்பு மேராக்களின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இன்று ஒரு நாள் மட்டும் புனித தோமையர்மலை காவல் வட்டத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள பல்லாவரம் காவல் சரகத்தில் 450 சிசிடிவி கேமராக்கள் உட்பட மொத்தம் 1014 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன், துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தெற்கு கூடுதல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், தெற்கு மண்டல இணை ஆணையாளர் சி.மகேஷ்வரி, பரங்கிமலை துணை ஆணையாளர் எம்.எஸ்.முத்துசாமி, தி.நகர் காவல் துணை ஆணையளர் பி.அரவிந்தன், அடையாறு காவல் துணை ஆணையாளர் சஷாங் சாய், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a comment