ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களிடம் பணியாற்றுபவர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருப்ப உரிமை ஒதுக்கீடாக வீடுகள் ஒதுக்கீடு செய்வதாக புகார்கள் வந்ததாக தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் பீட்டர் சாலை, சிஐடி நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, தாடாண்டர் நகர் உள்ளிட்ட பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை ரத்து செய்ய கோரியும், பழைய வாடகையான ரூ. 1,438 -ஐ வசூலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, 75-க்கும் மேற்பட்ட வாடகைதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணையில் இருந்தது. இன்று இந்த வழக்கு விசாரணையின்போது, வீட்டு வசதித் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர், உயர்நீதிமன்ற உத்தரவின் படி 50 சதவீதம் வாடகை பாக்கியை வாடகைதாரர்கள் செலுத்தவில்லை என்றும், 8 ஆண்டுகளுக்கு பிறகுதான் வாடகை உயர்த்தபட்டுள்ளதாகவும், சில கட்டிடங்கள் சிதிலமடைந்த நிலையில் இருப்பதால் இடித்து விட்டு மீண்டும் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அரசு நிர்ணயம் செய்த வாடகை, அந்த பகுதிகளில் உள்ள சந்தை நிலவரத்தை விட குறைவு தான் என்று விளக்கமளித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தற்போது ராயப்பேட்டை பீட்டர் சாலையில் 500 சதுர அடி கொண்ட ஒற்றை படுக்கை அறை வீட்டிற்கு ரூ.9,775 ரூபாய் வசூலிக்கபடும் நிலையில் அரசின் இந்த வாடகை உயர்வு ரூ.6,727 ரூபாய் மட்டுமே என்பதால் இது நியாயமானது தான் என கூறி, வாடகையை உயர்த்தி அரசு பிறப்பித்த அரசாணையை உறுதி செய்து உத்தரவிட்டார்.
மேலும் அரசு குடியிருப்புகளில், வேண்டியவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களிடம் பணியாற்றுபவர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருப்ப உரிமை ஒதுக்கீடாக வீடுகள் ஒதுக்கீடு செய்வதாக புகார்கள் எழுந்துள்ளதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
விதிகளுக்கு முரணாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த ஒதுக்கீடுகள் குறித்து வீட்டு வசதி துறை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும், விதிகளை மீறி ஒதுக்கீடு பெற்றவர்களை உடனடியாக காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஏழை மக்களுக்கு குறைந்த வாடகையில் வீடு வழங்கும் இந்த திட்டத்தை அதிகாரிகள் தவறாக பயன்படுத்தியுள்ளதாக வேதனை தெரிவித்த நீதிபதி, வாடகையை செலுத்தாதவர்களை அரசு குடியிருப்புகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும், இந்த நடைமுறைகளை 12 வாரங்களில் முடிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.