அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித்திட்டம், ஊழல் ஒழிப்பு முன்னணியின் பணிப்பாளர் எனக் கூறும் நாமல் குமாரவினால் அம்பலத்துக்கு வந்த பின்னணியில், பொலிஸ் திணைக்களம் அது தொடர்பில், தீவிர விசாரணைகளை நடாத்தி உண்மைகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று (22) முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதிஅமைச்சருமான அமீர் அலி, கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.இஸ்மாயில், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் மற்றும் மேல்மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.பாயிஸ் ஆகியோர் இன்று காலை, பொலிஸ் தலைமையகத்துக்குச் சென்று, இந்த முறைப்பாட்டை பதிவு செய்தனர்.
இந்த சதியை வெளிப்படுத்திய நாமல் குமார, மற்றும் இந்த சதியுடன் தொடர்பு பட்டார்கள் என கூறப்படும் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, பிரான்சில் வசிக்கும் துஷார பீரிஸ் ஆகியோரிடமும் உரிய விசாரணைகளை நடாத்தி, இந்தச் சதியின் பின்னணி பற்றியும், உண்மைத் தன்மையை பற்றியும் வெளிக்கொணருமாறு முறைபாட்டாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அது மாத்திரமின்றி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு, பொலிஸ்மா அதிபரிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.