வீட்டில் தனியாக இருந்தவர் மீது தாக்குதல்

263 0

அயகம பகுதியொன்றில் உள்ள வீடொன்றில் தனியாக தங்கியிருந்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் காயங்களுக்குள்ளானவரை மீட்ட பொலிஸார், அவரை வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கியும் அவர் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அயகம வரனியகடிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஜகத் ரூபவன்ச என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார்.

அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரனியகடிய பகுதியில் காணப்படும் மரணித்தவரின் வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்த சிலரினால் தனியாக தங்கியிருந்தவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதல் சத்தம் கேட்டு பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸாரின் வருகையறிந்த தாக்குதல்தாரிகள் இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் காயங்களுக்குள்ளானவரை பொலிஸார் அயகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார். இவரது சடலமானது மரண பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையின் பிரதேச அறையில் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று 22 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 8.30 மணி முதல் 9 மணியளவிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் அயகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a comment