வட மாகாண சபையின் ஆயுட் காலம் நாளை (24) புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைய இருக்கின்ற நிலையில் சபையின் இறுதி அமர்வு இன்று (23) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
யாழ்ப்பாணம், கைதடியிலுள்ள மாகாண சபை செயலக சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சீ. வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு இவ் அமர்வு ஆரம்பமானது.
வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வை வடமராட்சி பாடசாலை மாணவர்கள் பார்வையிட்டுள்ளனர்.
இந்த மாணவர்களை மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அழைத்து வந்து சபையைக் காண்பித்து பார்வையாளர் இருக்கையில் பார்வையிடுவதற்கும் அனுமதியும் பெற்றுக் கொடுத்தார்.
இதற்கமைய மாணவர்களும் ஆசிரியர்களும் மாகாண சபையின் இறுதி அமர்வைப் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வட மாகாண சபை கீதம் உருவாக்கப்பட்டு சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், வட மாகாண சபையின் இறுதி அமர்வில் (134வ து) இது ஒலிக்க விடப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு 1 வது மாகாண சபை உருவாக்கப்பட்ட போது கீதம் உள்ளிட்ட அடிப்படை விடயங்கள் எவையும் இருக்கவில்லை. இந் நிலையில் வட மாகாண சபை ஆட்சி பொறுப்பேற்றதன் பின் கீதம், செங்கோல், அவை வடிவமைப்பு, ஆசனம் போன்ற அனைத்தும் புதிதாக உருவாக்கப்பட்டது.
இதன்படி மாகாண சபை உறுப்பினர்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டு இன்றைய தினம் சபைக்கு கொண்டுவரப்பட்டு சபையில் ஒலிக்க விடப்பட்டதுடன், சபையினால் கீதம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.