முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பெற்றுக்கொடுத்த வடக்கு மாகாணசபை இன்று முதல் மக்கள் பிரதிநிதிகள் இன்றி செயற்படபோகின்றமை தொடர்பில் கவலை அடைகின்றோம். இதற்கான பொறுப்பை தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
வடமாகாணசபை இன்று முதல் கலையவுள்ளமை தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிடுகையில்.
வடக்கு மாகாணசபையின் இன்றைய நிலையை எண்ணி அதனை உருவாக்கிய முன்னைய அரசாங்கம் என்ற வகையில் கவலை அடைகின்றோம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கிலேயே இந்த மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது.
100 வீதம் அதற்கான பிரதிபலனை அடைய முடியாவிடினும் அதனால் ஒருசில நல்ல விடயங்களும் இடம்பெற்றன என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
யுத்தம் முடிவடைந்ததும் 30 வருடங்களின் பின்னர் வடக்கு மக்களுக்கு தமது மாகாணத்திற்கு தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்துகொள்வதற்கான உரிமையை மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொடுத்தார்.
இதன்மூலம் மனிதாபிமானமும் ஜனநாயகமுமே வெற்றிபெற்றன.அன்று அந்த மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக்கொடுத்தோம். ஆனால் இன்று இந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இன்றுமுதல் வடமாகாணசபை மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சபையாக செயற்படபோகின்றது.
மாகாணசபைத் தேர்தல் தொடர்ந்தும் தாமதமடையும் நிலைமையே காணப்படுகின்றது. இவ்வாறு தேர்தலை தாமதப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை. குறிப்பாக இந்த மாகாணசபைத் தேர்தல் பிற்போடப்படுவதற்கான காரணத்தை உருவாக்கிய சட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது.
தமிழ்தேசியக்கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதன் காரணமாகவே அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்தது. இல்லாவிடின் அந்த சட்டமூலம் தோல்வி அடைந்திருக்கும் எனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுத்து தேர்தல் தாமதமடைவதற்கான சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவு வழங்கிய தமிழ் தேசியக்கூட்டமைப்பு வடமாகாணசபைத் தேர்தல் தாமதம் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டும்.
நாம் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் வடக்கு மக்களின் ஜனநாயகத்தை உறுதிசெய்தோம். ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்று அந்த மக்களின் வாக்குரிமை தாமதமடைவதற்கு காரணமாக இருக்கிறது.