முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் ஆயுதங்கள் இருப்பதாக பாரதூரமான குற்றச்சாட்டொன்றை முன்வைத்து பெரும் சர்ச்சையொன்றை ஏற்படுத்திய புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான கந்தசாமி இன்பராஜா நேற்றைய தினம் சி,ஐ.டி இரகசிய பொலிசாரினால் 4ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்.
நாட்டில் மீண்டும் ஒரு ஆயுதக் கலாசரம் தோற்றம் பெறக்கூடாது என்பதற்காகவே தான் தனக்குத் தெரிந்த இந்தத் தகவலைத் தெரிவித்ததாக விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கந்தசாமி இன்பராஜா தெரிவித்திருக்கின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளால் கைவிடப்பட்ட மற்றும் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் தற்போது முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் இருப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான கந்தசாமி இன்பராஜா கடந்த ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்த கருத்து கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கந்தசாமி இன்பராஜாவின் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த முஸ்லீம் அரசியல்வாதியான நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கமைய புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினரைகடந்த 8 ஆம் திகதி திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவில் வைத்து கந்தசாமி இன்பராஜா தலைமையிலான புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் 4 மணித்தியாலங்கள் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து 22ஆம் திகதி திங்கட்கிழமையான நேற்று புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினர் அண்மையில் வெளியிட்ட ஊடக வெளியீடு தொடர்பில் மேலுமொரு விசாரணைக்காக 4ஆம் மாடிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
இதற்கமைய சிஐ.டி யினரின் நான்கரை மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த புன்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராஜா நான்காம் மாடிக்கு வெளியில் நின்றிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தார்.