தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி!

298 0

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் கமிஷனின் 5வது விசாரணை இன்று தொடங்கியது.

தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி ஆட்சியர் அலுலகத்தை நோக்கி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில், போலீஸார் நடத்திய துப்பாகிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை நியமித்து உத்தரவிட்டது.

பிரமாணப் பத்திரங்கள் பெறப்பட்டதன் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு தூத்துக்குடி அரசினர் சுற்றுலா மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதுவரை 4 கட்டமாக நடந்த விசாரணையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பாதிக்கப்பட்டவர்கள், வருவாய்த்துறையினர், போலீஸார் என 25 பேரிடம் விசாரணை செய்யப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த ஒரு நபர் ஆணையத்துக்கு 3 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணை செய்ய கூடுதலாக 6 மாத காலம் அவகாசம் அளிக்கும்படி ஆணையம், தமிழக அரசிடம் வைத்த கோரிக்கையை ஏற்று, கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (22.10.2018) முதல் 5-வது கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸாரின் தடியடியில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று உயிரிழந்த கீழமுடிமண் கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்டினின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினார். இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை விசாரணை நடைபெற உள்ளது. நாள் ஒன்றுக்கு 12 பேர் வீதம் 44 பேருக்கு ஆணையத்தின் முன்பு ஆஜர் ஆக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a comment