முதல்வர் பழனிசாமி, ராஜினாமா செய்ய வேண்டும். இதுவரை விடப்பட்டுள்ள டெண்டர்கள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். டெண்டர் ஊழல் குறித்து, சட்டசபையிலும் விவாதிக்க வேண்டும்,” என, தி.மு.க., கொள்கை பரப்பு செயலர், அ.ராசா கூறினார்.
சென்னை அறிவாலயத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் பழனிசாமி மீதும், அவரது உறவினர்கள் மீதும், போதிய ஆதாரங்கள் இருப்பதால், சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலக வங்கி வழிகாட்டுதல்படி, வர்த்தக ரீதியாக,ரத்த சொந்தம் உள்ளவருக்கு, ஒப்பந்தம் கொடுக்கக் கூடாது. எனவே, முதல்வர் பழனிசாமி, வழக்கை எதிர்கொள்ள வேண்டும்.
நான், ‘2ஜி’ வழக்கை எதிர்கொண்டுள்ளேன்; ஓடி ஒளியவில்லை. வழக்கு இல்லாமலே, நான் பதவியை ராஜினாமா செய்தேன். எனவே, முதல்வர் பழனிசாமியும் ராஜினாமா செய்ய வேண்டும்.
இதுவரை விடப்பட்டுள்ள டெண்டர்கள் குறித்து, வெள்ளைஅறிக்கை வெளியிட வேண்டும். டெண்டர் ஊழல் தொடர்பாக, சட்டசபையிலும் விவாதிக்க வேண்டும்.தி.மு.க.,வை வீழ்த்தவேண்டும் என்ற சதி, டில்லியில் தீட்டப்பட்டுள்ளது. இதற்கு, அ.தி.மு.க., அரசு பகடைக்காயாக உள்ளது. ஊழல் புகார்கள், வழக்குகள் உள்ள அமைச்சர்கள் சிலர், வெகு விரைவில், சிறை செல்வது உறுதி.
பாலியல் புகார் காரணமாக, வெளியுறவு இணை அமைச்சராக இருந்த அக்பர் பதவி விலகினார்; அதேபோல, அமைச்சர் ஜெயகுமாரும், பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு, அ.ராசா கூறினார்.