இன்றைய தேதியில் உலகின் நம்பர் ஒன் மர்மதேசம் பௌத்த சிங்கள இலங்கை தான். தமிழின அழிப்பில் நுணுக்கமான நூதனமான வஞ்சகமான உத்திகளையெல்லாம் கடைப்பிடித்த கொழும்பு தடயங்களை மூடி மறைத்துத் தப்பிக்கப் பார்க்கிற வடிகட்டிய கோழைத்தனத்தில் கொடிகட்டிப் பறக்கிறது இப்போது!
2008-2009ல் மட்டுமே பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் மகிந்த ராஜபக்ச அரசால் கொன்று குவிக்கப்பட்டனர். தனது ஈறுகளில் ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்த அந்த நிலையிலேயே ‘ஒரு புல் பூண்டுக்குக் கூட இலங்கை ராணுவம் கெடுதல் செய்யவில்லை’ என்று வாக்குமூலம் கொடுத்தது ராஜபக்ச அரசு. வெளுத்ததெல்லாம் பால் – என்று நம்புகிற சுப்பிரமணியன் சுவாமி, ஹிந்து ராம் போன்ற ‘அப்பாவி’ ஆட்டுக்குட்டிகள் அதையும் நம்பினார்கள்.
‘ராஜபக்சவுக்கு பாரதரத்னா பட்டம் கொடுத்தாகவேண்டும்’ என்று ஒற்றைக்காலில் நிற்கும் அளவுக்கு அவர்களது அசட்டு நம்பிக்கை வலுவாக இருந்தது. ‘லங்கா ரத்னா’ பட்டத்துக்குக் கைமாறாக பாரதரத்னா கொடுத்தால் என்ன தவறு என்று அவர்கள் நினைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. (நடந்தது இனப்படுகொலைதான் – என்பது நிரூபிக்கப்படும்போது லங்கா ரத்னாக்களை தூக்கியெறிய சம்பந்தப்பட்டவர்கள் இப்போதே தயாராக இருப்பது நல்லது!)
காணாது போயிருக்கும் எமது ஒன்றரை லட்சம் உறவுகள் எங்கே – என்று மன்னார் ஆயர் ஜோசப்பு ராயப்பர் ஆதாரத்துடன் கேட்டது சு.சு.க்கள் மற்றும் ராம்களின் செவிகளில் ஏறவேயில்லை. தமிழ் மக்களைப் பூண்டோடு அழிக்க தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களும் பாஸ்பரஸ் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன – என்று சிங்களப் பத்திரிகையாளன் பிரகீத் எக்னலிகோட சொன்னதைக் கூட காதில் வாங்கிக்கொள்ளவில்லை அவர்கள். ராஜபக்சவை நம்பிய அளவுக்குக் கூட ராயப்பரையோ பிரகீத்தையோ நம்பவில்லை.
உண்மையை அம்பலப்படுத்திய ஒரே குற்றத்துக்காக பிரகீத் ‘காணாமல் போய்’ ஆறு ஆண்டுகள் ஆகிறது. ஊடக வெளிச்சத்திலேயே உலவும் சு.சு.வோ பத்திரிகையுலக ஜாம்பவான் ராமோ இன்றுவரை அதுபற்றி கவலைப்படவில்லை. ‘எவன் எக்கேடு கெட்டால் உனக்கென்ன? அம்பேத்கருக்கும் நேருவுக்கும் காமராஜருக்கும் அப்துல்கலாமுக்கும் கொடுத்த பாரதரத்னாவை ராஜபக்சவுக்கும் கொடுத்துவிட்டு வேறு வேலையைப் பார்’ என்று இந்தியாவையே மிரட்டுபவர்கள் பிரகீத் பற்றி எப்படிப் பேசுவார்கள்!
‘ராஜபக்ச அரசு செய்தது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை’ ‘தடயங்களை அழிப்பதற்கு மேலதிக அவகாசம் எடுத்துக் கொள்வதற்காகவே சர்வதேச விசாரணையை இலங்கை இழுத்தடிக்கிறது’ என்றெல்லாம் நாம் குற்றஞ்சாட்டியபோது சுவாமி. ராம் போன்றவர்கள் நம்மைக் கோமாளிகளாக்கப் பார்த்தனர். ‘இங்கேயிருந்து நீங்கள் சொல்கிற இதையெல்லாம் உங்கள் ஈழத்திலிருந்து யாராவது சொல்கிறார்களா’ என்று நக்கலடித்து நம் முகத்தில் கரிபூசினார்கள்.
இந்தப் பழைய கதையையெல்லாம் இப்போது நினைவுபடுத்தக் காரணம் இருக்கிறது. ‘நடந்தது இனப்படுகொலையென்பதால் சர்வதேச விசாரணை தான் ஒரே வழி’ என்று வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றினார் – முதல்வர் விக்னேஸ்வரன். ‘இந்தத் தீர்மானமெல்லாம் எதற்கு’ என்று சம்பந்தரும் சுமந்திரனும் பாய்ந்தது குறித்தெல்லாம் கவலைப்படவில்லை அவர். நேர்மையுடன் பேசினார் நேர்படப் பேசினார். அப்படியிருந்தும் சு.சு.க்களும் ராம்களும் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
இப்போது விக்னேஸ்வரனையே மிஞ்சும் விதத்தில் இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் சிங்கள சுப்பிரமணியன்சாமியான விமல் வீரவன்ச. உண்மை நிலவரத்தை நேரில் கண்டறிய இலங்கைக்கு வர இருந்த ஐ.நா.நிபுணர் குழுவை எதிர்த்து ‘சாகும்வரை’ உண்ணாவிரதம் இருந்தாரே அதே வீரவன்ச. பான் கீ மூனை ‘சர்வதேச மாமா’ (international Pimp) என்று பாசம் பொங்க அழைத்தாரே அதே வீரவன்ச.
குவியல் குவியலாக தமிழரின் பிணங்கள் புதைக்கப்பட்டிருக்கும் இடங்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் – என்று சென்ற வார இறுதியில் வீரவன்ச சொல்லியிருப்பதுதான்இ கொழும்பு அரசியல் வட்டாரத்தில் இப்போதைக்கு ஹாட் டாபிக்.
வீரவன்ச பொத்தாம்பொதுவாக இதைப் பேசிவிடவில்லை என்பதுடன் அரசியல் மேடையிலும் பேசிவிடவில்லை. இலங்கையின் சக்திவாய்ந்த பௌத்தபீடங்களில் ஒன்றான மல்லவத்தே பீடத்தின் மகாதேரரிடம் இதைத் தெரிவித்திருக்கிறார் அவர்.
‘கிளிநொச்சியிலிருந்து ராணுவமுகாம் அகற்றப்பட்டால் அந்த முகாமுக்குள் குவியல் குவியலாகப் பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பது அம்பலமாகிவிடும். அந்தப் பிணங்கள் விடுதலைப் புலிகளின் பிணங்களா அப்பாவிப் பொதுமக்களின் பிணங்களா என்றெல்லாம் கண்டறிவது கஷ்டம். எல்லா ராணுவ முகாம்களிலும் இதே நிலைதான். இதெல்லாம் அம்பலமாகும் நிலையில் சர்வதேசம் கைகட்டி வேடிக்கை பார்க்காது… செர்பியாவிலிருந்து கொசாவோவை விடுவித்து சுதந்திர நாடாக அறிவித்ததைப் போல் இலங்கையிலுள்ள தமிழர் பகுதியையும் தனிநாடாக அறிவித்துவிடுவார்கள்’ என்பது தேரரிடம் வீரவன்ச தெரிவித்த தகவலின் சுருக்கம்.
படிக்க மர்மக்கதை மாதிரி இருக்கிறது வீரவன்சவின் பேச்சு. அதிரி புதிரி அறிக்கைகளுக்குப் பெயர் பெற்றவர் அவர். கூடுவிட்டுக் கூடு பாய்வதில் வல்லவர். மகிந்த ராஜபக்ச ஆட்சியில் அமைச்சர். மகிந்தனைக் குளிர்விக்க பான்கீமூனை ‘மாமா’ ஆக்கியவர். சுப்பிரமணியன் சுவாமியின் பரபரப்புக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை வீரவன்சவின் பரபரப்பு! சு.சு.வுக்கும் வீரவன்சவுக்கும் அப்படியொரு ஜாதகப் பொருத்தம்!
தேரரிடம் போய் வீரவன்ச இதைச் சொல்லியிருப்பதன் நோக்கத்தை உடனடியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. தனிப்பட்ட முறையில் நிதி மோசடி பாலியல் வன்முறை – என்று ஏகப்பட்ட வழக்குகள் வீரவன்ச மீது! அதைச் சரிக்கட்ட இதைப் பயன்படுத்தப் பார்க்கிறாரா தெரியவில்லை.
‘நாங்கள்தான் உன்னை மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றினோம்’ என்று சொல்லிச் சொல்லியே ராஜபக்சவின் தலையில் தட்டிக்கொண்டிருக்கிறார்கள் மைத்திரியும் ரணிலும்! ‘எங்கே புதைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும்’ என்று சொல்வதன்மூலம் அவர்களுக்கு வீரவன்ச சிக்னல் கொடுக்கிறாரா – புரியவில்லை. (இவர்கள் இப்படிச் சொல்வதிலிருந்தாவது நடந்தது இனப்படுகொலை என்பதை இந்தப் பூவுலகம் புரிந்துகொண்டிருக்க வேண்டாமா?)
வீரவன்ச சொல்வதையெல்லாம் தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும் – என்று இந்தச் செய்தியைப் படித்த சிங்கள வாசகர்கள் கிண்டலடிக்கிறார்கள் – பின்னூட்டத்தில்! ‘பிணக்குவியல்கள் வெளிப்படும்போது அதற்குக் காரணமானவர்களில் ஒருவனான உனக்கும் இருக்கிறது ஆப்பு’ என்கிறார்கள் தமிழ் வாசகர்கள். வீரவன்சவுக்கு இரண்டு பக்கமும் இடி!
வீரவன்ச தெரிவித்திருக்கும் இந்தத் திடுக்கிடும் தகவலை இன்னொரு கோணத்தில் பார்க்க வேண்டியிருக்கிறது. மார்க்சியவாதியாக அரசியலில் நுழைந்து பௌத்த சிங்களப் பேரினவாதியாக மாறியவர் அவர். தமிழரின் பிணக்குவியல் பற்றியெல்லாம் பேசினால் பௌத்த சிங்களப் பேரினவாதம் தன்னை நசுக்கிவிடும் என்பது அவருக்குத் தெரியும். அந்த ஆபத்தை அறிந்தும் இதைப் பேசுவதைப் பார்த்தால்இ முழுக்க முழுக்க ‘கப்சா’ என்று ஒரேயடியாக ஒதுக்கிவிட முடியவில்லை.
ஏற்கெனவே யாஸ்மின் சூகா போன்ற நேர்மையான மனித உரிமைப் போராளிகள் இலங்கை ராணுவ முகாம்களில் நடந்த சித்திரவதைகளையும் கொலைகளையும் அம்பலப்படுத்தி இருக்கின்றனர். அதை நினைத்துப் பார்க்கும் போது வீரவன்ச சொல்வது நூறு சதவீதம் உண்மையாக இருக்குமோ என்கிற அச்சம் எழாமலில்லை.
பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லாத நிலையில் அப்படியொரு அச்சுறுத்தல் இருப்பதாக சிங்கள ராணுவம் இட்டுக்கட்டிச் சொல்வதையும் ‘தமிழர் பகுதிகளிலிருந்து ராணுவத்தை வெளியேற்றும் பேச்சுக்கே இடமில்லை’ என்று அறிவிப்பதையும் வீரவன்ச சொல்வதுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பதைபதைக்கிறது மனசு.
இத்தகைய அச்சங்களுக்கிடையில் யாழ்ப்பாணத்தில் ‘எழுக தமிழ்’ பேரணி சனிக்கிழமை (செப்டம்பர் 24ம் தேதி) நடக்க இருக்கிறது. இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரியும் தமிழர் தாயகத்திலிருந்து ராணுவத்தையும் ராணுவ முகாமையும் அகற்றக் கோரியும் தமிழரின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஷ்டித் தீர்வை வலியுறுத்தியும் நடத்தப்படுகிற அந்த (பாதிக்கப்பட்ட) மக்கள் பேரணியைச் சீர்குலைப்பதில் இலங்கை அரசைக் காட்டிலும் சம்பந்தரின் தமிழரசுக் கட்சி தீவிரம் காட்டுவது அதன் (அவ)லட்சணத்தைக் காட்டுகிறது.
பேரணிக்கான காரணங்கள் நியாயம்தானாம்…
ஆனால் இந்த நேரத்தில் பேரணி நடத்துவது அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்துமாம்….
இப்படியெல்லாம் பசப்ப பச்சைத் துரோகிகளால் மட்டுமே முடியும். எந்த அரசுக்கு நெருக்கடி ஏற்படுமென்கிறார்கள்? இனப்படுகொலையை மூடி மறைக்கும் ஒரு பேயாட்சிக்கா? ஓநாய் நனைகிறதென்று அழுகிறதாமா ஆடு?
இதுஇ காந்தி பிறந்த தேசத்துக்கே அகிம்சைப் போராட்டம் குறித்து வகுப்பெடுத்த எங்கள் திலீபனின் வாரம். ‘எமது மக்கள் தமக்கான விடுதலையைத் தாங்களே தேடிக் கொள்வர்’ என்று திலீபன் சொன்னது பொன்னெழுத்துக்களால் எழுதி வைக்க வேண்டிய போர் முழக்கம்.
எழுக தமிழ் – பேரணி தனக்கான நீதியைத் தானே தேடிக்கொள்ள எங்கள் தாயகத் தமிழ் மக்கள் வகுத்திருக்கும் வியூகம். இந்த வியூகத்தைத் தகர்க்க எவர் முயன்றாலும் வரலாற்றின் குப்பைத்தொட்டியில் அவர்களைத் தூக்கிப் போட்டுவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும் நாம்! போராடிக் கொண்டிருக்கிற எந்த இனமும் களையெடுக்காமல் தலையெடுக்க முடியாது.
எழுக தமிழ் – பேரணி பதவி நாற்காலிகளுக்குக் குறிவைக்கிற தேர்தல் பேரணி அல்ல! எமது தாயக மக்களுக்கு நீதி கேட்கும் பேரணி. விலங்குகளைப் போல விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட மக்களுக்கான நீதி நியாயத்தைப் பெறத் துணை நிற்காமல் சிங்கள இறையாண்மையைச் சப்பரத்தில் ஏற்றித் தூக்கிச் சுமக்கும்படி உபதேசிக்கிறார்களா சம்பந்தனும் சுமந்திரனும்!
அப்படி அவர்கள் அறிவிக்கிற நிலையில் ‘அழுகிவிட்ட பிணங்களைத் தூக்கிச் சுமக்கிற வேலையையெல்லாம் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்’ என்று தெள்ளத் தெளிவாகத் தெரிவித்துவிட்டு யாழ் மண்ணில் கூடவேண்டும் ஒவ்வொருவரும்!
‘ஒன்றுமே நடக்கவில்லை என்றால் சர்வதேச விசாரணை நடத்த இலங்கை ஏன் அஞ்சவேண்டும்’ என்கிற நமது கேள்விக்கு இன்றுவரை பதிலில்லை – இனஅழிப்பில் ஈடுபட்டவர்களிடமிருந்து! ‘எமது ஒன்றரை லட்சம் உறவுகள் எங்கே’ என்கிற ராயப்பு ஜோசப்பின் கேள்வியே காதில் விழாததைப் போல் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் மைத்திரியும் ரணிலும்! எழுக தமிழ் – பேரணி உலகின் இதயத்தை உலுக்கினால்தான் வழிக்குக் கொண்டுவர முடியும் சிங்கள இலங்கையை!
இலங்கையின் ஒருமைப்பாட்டைப் புதைக்க முயல்பவர்கள் தாயகத்திலிருக்கும் எமது உறவுகளல்ல! பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைக் குழிதோண்டிப் புதைக்க முயல்பவர்கள் யாரோ அவர்கள்தான் இலங்கையின் ஒருமைப்பாட்டை உயிரோடு புதைக்க முயல்பவர்கள். இலங்கையின் எடுபிடிகளாகவே இருக்க விரும்புகிற தலைவர்கள் இந்த உண்மையை இலங்கைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
வீரவன்ச சொன்னதில் எது உண்மையோ இல்லையோ ஒன்றே ஒன்று மட்டும் நூறு சதவீதம் உண்மை. பிணக் குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடந்தது இனப்படுகொலைதான் என்பது நிரூபிக்கப்பட்டால் அதற்குப் பிறகு ஒற்றை இலங்கைக்கு வாய்ப்பேயில்லை. ஒரு தீவு இரு நாடு – என்பதுதான் சாத்தியமாயிருக்கும். அப்படியொரு நிலையில் திருவாளர்கள் சம்பந்தரும் சுமந்திரரும் சிங்கக் கொடியோடு கொழும்பிலேயே இருந்துவிட வேண்டியதுதான்!