வனங்கள், தொல்லியல், மகாவலி விரிவாக்கம், சட்டம் என்ற பல்வேறு காரணிகளுக்கூடாக எமது நிலங்கள் சத்தம் சந்தடி இல்லாமல் ஒவ்வொரு பகுதிகளிலும் சிறு சிறு பிரிவுகளாக சூறையாடப்பட்டு வருகின்றன என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசுகளினால் முன்னெடுக்கப்பட்டுவந்த இன அழிப்பு அல்லது இனச் சுத்திகரிப்புப் பற்றி உலக நாடுகள் பலவும் அறிந்திருக்கின்றன.
ஆனால் தற்போது எதுவித ஆரவாரங்களுமின்றி துப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் என்ற பெயரால் எமது தமிழ்ப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு சூழல் அரசியல் என்ற மாயைச் சொல்லை பயன்படுத்தி உலக நாடுகளை நம்பச் செய்கின்ற கனகச்சிதமான செயற்பாடுகள் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
சூழல் அரசியல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படுகின்ற பச்சை யுத்தங்கள் பல. அவற்றுக்கே ‘சூழல் அரசியலும் நில அபகரிப்பும்’, என்று தலையங்கம் கொடுத்துள்ளோம். ‘வனங்களும் நில அபகரிப்பும்’, ‘தொல்லியலும் நில அபகரிப்பும்’, ‘மகாவலியும் நில அபகரிப்பும்’, ‘சட்டங்களும் நில அபகரிப்பும்’ எனப் பல வழிகளிலும் நில அபகரிப்புக்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றன.
வனங்கள், தொல்லியல், மகாவலி விரிவாக்கம், சட்டம் என்ற பல்வேறு காரணிகளுக்கூடாக எமது நிலங்கள் சத்தம் சந்தடி இல்லாமல் ஒவ்வொரு பகுதிகளிலும் சிறு சிறு பிரிவுகளாக சூறையாடப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு நாட்டிலும் காணப்படுகின்ற மொத்த நிலப்பரப்பின் 23 சதவிகிதம் வனப்பகுதிகளாக பராமரிக்கப்பட வேண்டும் என்பது சட்டம். இந்த சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இலங்கையில் காணப்படும் மொத்த நிலப்பரப்புகளின் பெரும்பகுதியான வனப் பகுதிகளை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலேயே அமைக்கப் பார்க்கின்றது அரசாங்கம்.
மற்றைய மாகாணங்களில் வனப் பகுதிகளைக் குறைத்து வடக்கு கிழக்கில் ஈடுகட்டப் பார்க்கின்றது. வட கிழக்கில் இவ்வளவு வனப்பகுதி இருக்க வேண்டும் என்று சட்டம் எதுவும் இல்லை.
ஆனால் இவ் ‘வனதிணைக்களம்’ என்ற அமைப்பினூடாக வனங்கள் பாதுகாக்கப்படுகின்றன என்ற போர்வையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இப் பகுதிகளில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையைத் தொடர்ந்து மக்கள் வாழ்விடங்கள் வனங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
தமது பூர்வீக வாழ்விடங்களை விட்டுவெளியேறிய மக்களின் நிலங்களில் காடுகள் உருவாகியிருந்தன“ என தெரிவித்துள்ளார்.