அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான பணிகள் நவம்பரில் தொடங்கும் – அமைச்சர் செங்கோட்டையன்

4240 0

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்குவதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். 

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் நடந்த ஒரு விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து பாலித்தீன் பயன்பாடு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். இதற்கான நடவடிக்கையை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எடுத்து வருகிறார். விஜயதசமியை முன்னிட்டு எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. சேர்க்கை எண்ணிக்கை பற்றிய விவரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.

கிராமப்புறங்களில் உள்ள மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஏழை-எளிய மக்களுக்காகத்தான் பள்ளிக்கல்வித்துறை இயங்கிக்கொண்டு இருக்கிறது. வசதி படைத்தவர்கள் தனியார் பள்ளிகளுக்குத்தான் செல்கிறார்கள். பொதுமக்களை பொறுத்தவரையில் தங்கள் குழந்தைகள் அனைவரும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற மோகம் இருக்கிறது.

இதுதொடர்பாக சமூகநலத்துறை அமைச்சருடன் நாளை (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதைத்தொடர்ந்து தமிழக அங்கன்வாடிகளில் படிக்கும் 1 லட்சம் மாணவ-மாணவிகள் அடுத்த ஆண்டு அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் சேர்ப்பதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Leave a comment