“இந்திய அமைதிப்படை” என்ற பெயரில் தமிழீழ மண்ணில் தமது ஆதிக்க கால்களை பதித்த இந்திய வல்லரசு இராணுவம் ஈழ மண்ணில் தன் கோரதாண்டவத்தை ஆடியது.
அரசியல் பலியாக தியாகி லெப் கேணல் தீலீபனை காவுகொண்டது.வஞ்சகப்பலியாக லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு விடுதலைப்புலிகளை களப்பலியாக்கியது. அடுத்து வெகுசனப்பலியாக யாழ். போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21, 22 ஆம் திகதிகளில் மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிகள், மேற்பார்வையாளர் உட்பட 21 பணியாளர்களும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்களுமாக 68 பேர் கொலை செய்யப்பட்டார்கள்.
ஈழ விடுதலைப்போராட்டத்தில் இந்திய ஆக்கிரமிப்பு படைகள் நடாத்திய பல்வேறு கொலைத் தாண்டவத்தில் யாழ் போதான வைத்தியசாலைப் படுகொலை தமிழ் மக்கள் மனங்களில் என்றும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாதவை.
உயிர்காக்க சென்ற மருத்துவ மனையிலேயே உயி்ர் பலி எடுத்த கோர சம்பவத்தை எப்படித்தான் மறக்க முடியும்?
“இந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் காலடி எடுத்து வைத்த தினத்தையே எமது போராட்டத்தின் இருண்ட நாளாக நான் கருதுவேன். எமது போராட்டத்தில் இந்திய ராணுவம் தலையீடு செய்தது ஓர் இருண்ட அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும்” – என்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் கூறினா்ர். எனவே, தேசியத்தலைவர் குறிப்பிட்டது போன்று என்றும் ஈழ விடுதலையில் இந்தியாவின் பங்கு ஓர் இருண்ட பக்கமே.
ஈழப் போராட்டம் வெற்றியின் விளிம்புக்கு செல்லும் ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒரு வகையில் தடுத்து நிறுத்திக்கொண்டேதான் இந்திய அரசு இருக்கின்றது.
ஈழத்தமிழர்களின் இதயத்தில் ஏற்படும் வலி இமயநாட்டிற்கு புரியாமையின் காரணம் தான் என்னவோ? பிராந்திய அரசியலும் புவிசார்பு அரசியலும் தான் ஈழ விடுதலையை அழித்தனவோ?