வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 31 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கையூட்டு பெற்ற குற்றச்சாட்டில் மஹவெலி அதிகாரசபையின் அதிகாரியொருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
காணி உறுதிப்பத்திரமொன்றைப் பெறுவதற்காக 20,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்திலேயே, மஹவெலி அதிகாரசபையின் அதிகாரி நேற்று கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சந்தேநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இலஞ்சம் பெற்ற அதிகாரிகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.