பதுளை மாநகரின் தங்க நகை கடையொன்றில் எட்டு இலட்சத்து நாற்பத்தேழாயிரத்து ஐநூறு ரூபாவுக்கு பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய பெண் ஒருவர் கொழும்பைச் சேர்ந்த ஹொரன என்ற இடத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரனயில் கைது செய்யப்பட்ட பெண் தங்கியிருந்த வீட்டின் அலுமாரியிலிருந்து 32 தங்கத் தோடுகள்,ஆறு தங்க மோதிரங்கள் ஆகியவற்றையும்,பதுளைப் பொலிசார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டிருக்கும் இப்பெண் பிறிதொரு பெண்ணுடன் கைக்குழந்தையொன்றையும் தூக்கிக்கொண்டு பதுளை மாநகரின் தங்க நகையகமொன்றில்,தங்க நகைகள் எடுக்கும் தோரணையில் தங்க நகைகள் திருடப்பட்டன.
இத்திருட்டுக்கள் மேற்படி தங்க நகை விற்பனை நிலைய சி.சி. டி.வி. கெமராவின் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இப் பதிவினடிப்படையில் பதுளைப் பொலிசார் மேற்கொண்ட தேடுதலின் பயனாகவும் தகவலொன்றினையடுத்தும் விரைந்த பொலிசார் கொழும்பைச் சேர்ந்த ஹொரணை என்ற இடத்தில் குறிப்பிட்ட ஒரு பெண்ணைக் கைது செய்து,திருடப்பட்ட ஒரு பகுதி தங்க நகைகளையும் மீட்டனர்.
திருடப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி எட்டு இலட்சத்து நாற்பத்தேழாயிரத்து ஐநூறு ரூபாவென்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட பெண்ணுடன்,கைக்குழந்தையுடன் வந்த பெண்ணைக் கைது செய்யவும் பதுளைப் பொலிசார் துரித நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட பெண் விசாரணையின் பின்னர் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று பதுளை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பாளர் எரிக் ரோகித்த தெரிவித்தார்.