எமது சமூகத்தின் முன்னேற்றத்தில் இதுவரைகாலமும் தமிழ் அரசியல் தலைவர்கள் செய்த பிழைகளை நான் ஒருபொதும் செய்யமாட்டேன் என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நல்லூரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
“நான் அரசுடன் இணைந்து கொண்டு அபிவிருத்திகளை மேற்கொள்ளாமல் இருக்கின்றேன் என பலரும் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் என்னை பொறுத்தவரை தமிழ் மக்களுடைய உரிமைகளையே முதலில் உறுதிசெய்ய வேண்டும்.
அப்போதுதான் அபிவிருத்திப் பணிகளை சிறந்த முறையில் மேற்கொண்டு மக்களின் வாழ்க்கையையும் நல்ல முறையும் கட்டியெழுப்ப முடியும்.
ஆனால் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகள் அனைத்தும் ஆட்சியாளர்கள் அன்பளிப்புக்களாக கருதப்படுமே ஒழிய அது தமிழர்களுக்கு உரியதாக கொள்ளப்படமாட்டாது. நாம் எப்போதும் பெரும்பான்மையினரின் கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்க நேரிடும்.
மேலும் எமது இனம் எப்படிப்போனாலும் பிரச்சினை இல்லை என்ற கோணத்தில், அபிவிருத்திகள் மட்டும் நடைபெற வேண்டுமென நினைத்திருந்தால் அதனை எப்போதே செய்திருக்க முடியும்” என சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.