குண்டர் தடுப்பு சட்ட நடைமுறையை அதிகாரிகள் பின்பற்றுவது இல்லை-ஐகோர்ட்டு கண்டனம்

240 0

குண்டர் தடுப்பு சட்ட நடைமுறையை அதிகாரிகள் முறையாக பின்பற்றுவது இல்லை என்று ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. 

புதுச்சேரியை சேர்ந்த செந்தில் என்கிற ரமேஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு காலாப்பேட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்துசெய்யக்கோரி அவரது மனைவி பத்மாவதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.விமலா, ஆர்.ராமதிலகம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சமூகவிரோதிகளை ஒடுக்க வேண்டும் என்பதற்காகவே குண்டர் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அந்த சட்டத்தை பிரயோகிக்கும்போது அதிகாரிகள் சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை.

குண்டர் தடுப்புச்சட்டத்தில் இருந்து தனது கணவரை விடுவிக்கக்கோரி மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவை அரசு அதிகாரிகள் முறையாக பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்காமல், அறிவுரைக்குழுமத்திடம் தான் முறையிட வேண்டும் எனக்கூறி தங்களது கடமையை தட்டிக்கழித்துள்ளனர்.

அறிவுரைக்குழுமத்திடம் விசாரணை நிலுவையில் இருந்தாலும், அரசிடம் அளிக்கப்படும் கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஏற்கனவே சில வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி உள்ளது. ஆனால், அதிகாரிகள் இதை முறையாக பின்பற்றவில்லை.

எனவே, மனுதாரரின் கணவர் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்டம் ரத்துசெய்யப்படுகிறது. இனிவரும் காலங்களில் குண்டர் தடுப்பு சட்டத்தை பிரயோகிக்கும்போது சமூகவிரோதிகள் எளிதில் தப்பிக்காமல் இருக்க சட்ட நடைமுறைகளை அதிகாரிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment