“பிரதமரின் அமைச்சரவை பத்திரம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. அவர் எந்த பத்திரத்தையும் சமர்ப்பித்திருக்கவும் இல்லை. அத்துடன் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதி தொடர்பில் என்னால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் தொடர்பாகவே ஆராயப்பட்டது” என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஊடகப்பேச்சாளரும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
“அமைச்சரவை கூட்டத்தின்போது துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. அமைச்சரவைக்கு பிரதமர் எந்த பத்திரத்தையும் சமர்ப்பித்திருக்கவில்லை.
ஆனால் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில் துறைமுகத்தின் கிழக்கு பகுதி தொடர்பாக நான் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்திருந்தேன். அந்த பத்திரம் தொடர்பாகவே அன்றைய தினம் கலந்துரையாடப்பட்டது.” என தெரிவித்தார்