காற்றில் பறந்தது சம்பந்தனின் வாக்குறுதி!

10990 0

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து. பிரதமர், சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி, அடுத்த வாரம் முடிவு செய்யலாம் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் ஒரு வாக்குறுதியைக் கொடுத்து அனுப்பியுள்ளார் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்கா ஜனாதிபதியுடன் நேற்று நடந்த சந்திப்பு தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் சம்பந்தமாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை,  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சந்தித்து உரையாடினார்கள்.

இப்பேச்சுக்களின் போது கூறப்பட்ட விடயங்கள் பின்வருமாறு,

அரசியல் கைதிகளின் விடயம் சட்ட ரீதியாக மாத்திரம் பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல.இது தமிழ் தேசிய பிரச்சினையுடன் தொடர்புடைய விடயம். ஆதலால் இது அரசியல் ரீதியாக எதிர்நோக்கப்பட வேண்டும். இதுவரையில் இது அரசியல் ரீதியாக அணுகப்பட்டிருக்கவில்லை. அரசியல் ரீதியாக அணுகப்பட வேண்டும் என நாம் வலியுறுத்தினோம்.

போர் முடிவடைந்து 9 ஆண்டுகள் கடந்து விட்டன. போர் முடிவடைந்தவுடன் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறையில் இருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து சிறையில் தடுத்து வைத்திருப்பது மனிதாபிமானமற்றது. அவர்களுக்கு எதிராக தாமதம் இல்லாமல் தண்டனை வழங்கியிருந்தால், தற்போது தண்டனைக்காலம் நிறைவேறி வெளியே வந்திருப்பார்கள்.
இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்குற்றம் சுமத்தப்பட்டு பலருக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலமே அவர்களுக்கெதிரான சாட்சியமாக இருக்கிறது. இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு புதிய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. இப்புதிய சட்டத்தில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் சாட்சியமாக முடியாது.இந்த சூழலில் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

1971ம் ஆண்டும் 88,89,ம் ஆண்டுகளிலும் மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்தவர்கள் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிய பலர் விடுவிக்கப்பட்டார்கள். யுத்தம் முடிவடைந்த பின்பு முன்னைய அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிய 12 ஆயிரம் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள். ஆகையால் இந்த கைதிகளை தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பது நியாயமற்றது அவர்களும் விடுவிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

சிறைக்கைதிகள் சிறையில் உண்ணாவிரதம் இருந்து போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். எமது வேண்டுகோளுக்கு இணங்க அந்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்கள்.பொது அமைப்புக்களும்,மக்களும், பல்கலைக்கழக மாணவர்களும் பலவித போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இவையெல்லாம் தமிழ் மக்களுடைய உணர்வுகளை பிரதிபலிக்கின்றன.

தமிழ் மக்களின் கருத்து, கைதிகள் தமிழர்களாக இருக்கிற காரணத்தினால்தான்,அரசு போதிய அக்கறை செலுத்தாமல் இருக்கிறது என்பதாகும்.இது நல்லிணக்கத்துக்கு பாதகமானது என்பதனையும் நாம் வலியுறுத்தினோம்.இவை அனைத்தையும் கேட்ட சிறிலங்கா அதிபர், அடுத்த வாரம் பிரதமர்,   சட்டமா அதிபர், மற்றும் தேவையான அனைவரையும் அழைத்து இந்த விடயத்தை சாதகமாக அணுகி கைதிகளின் விடுதலையை எவ்விதமான முறையில் நிறைவேற்றலாம் என்பதை முடிவு செய்வதாக தெரிவித்தார்

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா , செல்வம் அடைக்கலநாதன், எம். ஏ.சுமந்திரன்,  எஸ்.சிவமோகன் மற்றும் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று நடக்கும் கூட்டத்தில் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வை தருவதாக சிறிலங்கா அதிபர், இரா.சம்பந்தனிடம் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment