ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் அப்துல் ஜப்பார் காஹ்ரமன் உள்பட 4 பேர், உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் உள்நாட்டு படையினரும், அமெரிக்க கூட்டுப்படையினரும் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு ஹெல்மாண்டு மாகாணத்தில் நாளை மறுதினம் (20-ந் தேதி) நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கியவர் அப்துல் ஜப்பார் காஹ்ரமன். இவர் நேற்று காலை 10 மணியளவில் தனது தேர்தல் அலுவலகத்தில் இருந்தார். அவர் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார்.அப்போது அங்கு திடீரென பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பில் அப்துல் ஜப்பார் காஹ்ரமன் உள்பட 4 பேர், உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவரது அலுவலகத்தில் சோபாவுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த குண்டுதான் வெடித்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து உயிரிழந்த வேட்பாளர் அப்துல் ஜப்பார் காஹ்ரமன் உள்ளிட்ட 4 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு தலீபான் பயங்கரவாதிகள் உடனடியாக பொறுப்பேற்றனர்.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி தலீபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.