திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அரசாங்கம் இந்தியாவிற்கு தாரைவார்க்க சூழ்ச்சி செய்கின்றது என்று சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி நாட்டுக்கு கிடைக்கப் பெறவுள்ள அபிவிருத்திகளை தமது சுய தேவைகளுக்காக தடை செய்ய முயற்சிக்கின்றனர் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்நிய நிறுவனத்துடன் செயற்படுத்திக் கொள்ளப்படவுள்ள ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கணியவள கூட்டுத்தாபனத்திற்குள் ஒரு சிலர் முரண்பாடுகளை தோற்றுவித்தால் அதனை எதிர்கொள்ள தயார் எனவும் தெரிவித்தார்.
பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்.
சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை தளம்பள் ஏற்படும் பொழுது எமது நாட்டிலும் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது இதனை அரசாங்கத்தின் குறைப்பாடு என்று குறிப்பிட முடியாது.
ஆனால் இதனையும் எதிர் தரப்பினர் விட்டு வைக்கவில்லை.
தற்போது முச்சக்கர வண்டிகளுக்கு மாத்திரம் பயன்படுத்த கூடிய வகையில் மிகு குறைந்த விலையில் எரிபொருள் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிபொருள் தொடர்பில் ஆய்வுகள் இடம் பெற்று வருகின்றது அடுத்த மாத காலத்திற்குள் சந்தைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.