ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்ய இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோ முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார் என வெளியாகியுள்ள தகவல்களை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன நிராகரித்துள்ளார்.
ரோ தன்னை கொல்ல முயற்சிக்கின்றது என ஜனாதிபதி ஒருபோதும் தெரிவிக்கவில்லை என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தகவல்களை வெளியிட்ட ஊடகங்களை அவர் கடுமையாக சாடியுள்ளார்.
ஜனாதிபதி சிறிசேன தன்னை கொல்வதற்கான சதிமுயற்சியில் ரோவிற்கு தொடர்பிருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர் என்றே குறிப்பிட்டார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இந்திய செய்தியாளர் ஒருவர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி ரோவை குற்றம்சாட்டியதாக தன்னிடம் தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதனை நிராகரித்துள்ள அமைச்சர் ராஜிதசேனாரட்ண ஏனையவர்கள் அவ்வாறு தெரிவிப்பதாகவே சிறிசேன தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனை தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வெளியான செய்திகளையும் அமைச்சர் நிராகரித்துள்ளார்.
இது குறித்த அமைச்சரவை பத்திரம் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை சிறிசேன மோடியை தான் சந்தித்தவேளை ஆராய்ந்த விடயங்களையே தெரிவித்தார் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.