“நாட்டில் காணாமல் போதல் இடம்பெறவில்லை, என்றும் அவ்வாறான சம்பவங்கள் பிரச்சினைக்குரியவை அல்ல எனவும் கூறுபவர்களைப் புறக்கணிக்க வேண்டும்” என காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
மேல்மாகாணத்தில் இன்று இடம்பெற்ற காணாமல் போனோர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டே ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு சாலிய பீரிஸ் கருத்து தெரிவிக்கையில்,
“நாட்டில் காணாமல் போதல் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் இடம்பெற்றுள்ளன என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்வதுடன், அவ்வாறான சம்பவங்களினால் காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்கொண்டுள்ள துன்பத்தை உணர்ந்துகொள்ள வேண்டும். அத்தோடு இவ்வாறான சம்பவங்கள் இனி நிகழாது என்பதனையும் உறுதிசெய்ய வேண்டும்
காணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளுக்கமைய காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதன் மூலம் அவர்கள் அதனைப் பெற்றுக்கொண்டு தமக்கான நீதியினைக் கோரக்கூடாது என்பது பொருளல்ல.
இழப்பீடு வழங்குவதன் மூலம் காணாமல் போனோர் தொடர்பான உண்மையினைத் தெரிந்து கொள்வதற்கான உரிமை ஒருபோதும் மறுக்கப்படாது.
அதேவேளை இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உண்மையினைத் தெரிந்து கொள்ளல், நீதியினைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் இழப்பீடு வழங்குதல் போன்ற எதுவித நடவடிக்கைகளாலும் காணாமல் போனோரின் உறவினர்கள் அனுபவித்த துன்பங்களை நிவர்த்தி செய்ய முடியாது.
இதுவரையில் எமது அலுவலகம் முன்னெடுத்து வந்திருந்த மக்கள் சந்திப்புக்களின் தொடர்ச்சியாக இம்முறை கொழும்பில் மக்கள் சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ளோம்.
அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு விளக்கமளிப்பதுடன், உறவினர்கள் எமது அலுவலகத்திடமிருந்து எதனை எதிர்பார்க்கின்றனர் என அறிந்து கொள்வதே இம்மக்கள் சந்திப்புக்களின் பிரதான நோக்கமாக உள்ளது.
காணாமல் போனோர் அலுவலகம் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட முடியும். எனினும் காணாமல் போனோரின் உறவினர்களின் தேவை எதுவென்பதற்கே நாம் முக்கியத்துவம் அளிக்கின்றோம்.
இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகம் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. காணாமல் போனோரின் உறவினர்களுக்கான இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை அதன்மூலம் மேற்கொள்ளப்படும்.
இழப்பீட்டு அலுவலகத்தினால் நியாயமான இழப்பீடு வழங்கப்படுவதனை உறுதிசெய்வதுடன், எதிர்காலத்தில் அவ்வலுவலகத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.
மேலும் அரசாங்கத்தினால் அமைக்கப்படுகின்ற ஆணைக்குழுக்கள் மீதான நம்பிக்கையீனம் பரவலாகக் காணப்படுகின்றது. குறிப்பாக வடக்கில் காணாமல் போனோர் அலுவலகம் மீது நம்பிக்கையற்ற நிலை வெகுவாகக் காணப்படுகின்றது. இந்த அலுவலகம் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள போதிலும் சுயாதீன ஆணைக்குழுவாகவே செயற்பட்டு வருகின்றோம்.
அலுவலகத்திற்கான கட்டடத்தொகுதியினைப் பெற்றுக்கொள்ளல், ஊழியர்களை பணிக்கமர்த்தல், விசாரணை அதிகாரிகளை நியமித்தல் உட்பட அலுவலகத்தை ஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.
அத்தோடு எதிர்வரும் மாதங்களில் காணாமல் போனோர் அலுவலகத்திற்கான 12 பிரதேச அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளது. அவற்றில் 5 பிரதேச அலுவலகங்கள் வடக்கு மாகாணத்தின் முக்கிய பிராந்தியங்களில் அமைக்கப்படவுள்ளன. மேலும் காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட வேண்டிய பரிந்துரைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளோம்.
பரிந்துரையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் செயற்படுத்தப்படுவதன் ஊடாக அதனைக்கொண்டு மாத்திரம் காணாமல் போனோரின் உறவினர்கள் திருப்தியடைய வேண்டும் என நாம் எதிர்பார்க்கவில்லை. அவர்களது உறவினர்கள் தொடர்பான உண்மையினை அறிந்துகொள்ளும் உரிமையினை நாம் உறுதி செய்துள்ளதுடன், அவர்களது துன்பத்தை எதனைக் கொண்டும் ஈடுசெய்ய முடியாது என்பதனையும் உணர்ந்துள்ளோம்.” என்றார்.