காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல்-எம்.ஏ. சுமந்திரன்

218 0

எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்துக் காணிகளையும் விடுவிக்க வேண்டுமென ஜனாதிபதி பணித்துள்ளமையினால், குறிப்பிட்ட திகதிக்குள், அனைத்துக் காணிகளையும் விடுவிப்பதற்கான இராணுவத்தினரின் நடவடிக்கை என்ன என்பது பற்றி அறிவிப்பதாக, இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

முப்படைகளின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (16) நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன், மாவை. சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், ஈ.சரவணபவன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர்கள், முப்படையினர், எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த கலந்துரையாடலில் முப்படையினர் வசமுள்ள காணிகளின் தரவுகள் ஆராயப்பட்டதுடன், இன்னும் விடுவிக்கப்பட வேண்டிய காணிகளின் தரவுகளும் விரிவாக ஆராயப்பட்டன. ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் விடுவிக்கப்படவுள்ள காணிகள் எவ்வளவு, விடுவிக்கப்பட்ட காணிகள் எவ்வளவு என்ற விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும், இராணுவம் மற்றும் பொலிஸார் உட்பட முப்படையினர் வசமுள்ள காணிகள் எனப் பிரித்து, ஆராயப்பட்டது. கடந்த காலங்களில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது முன்வைக்கப்பட்ட தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இராணுவத்தினரால் அதிகளவான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடற்படையினர் மிகவும் சொற்பளவிலான காணிகளையே விடுவித்துள்ளனர்.

அதனடிப்படையில், நேற்றைய கலந்துரையாடலின் போது, முன்வைக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், கடற்படையினரின் கைவசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கான நேர அட்டவணை கையளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

இராணுவம் வசமும் பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் விடுவிப்பதற்கு பல ஏக்கர் காணிகள் உள்ளன. அதிலும் பல காணிகளை விடுவிப்பதற்கு முடிவெடுத்துவிட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இராணுவ முகாம்களில் உள்ள இராணுவத்தினரை வேறு பகுதியில் மாற்றுவதற்கான மாற்றுக் காணிகள் எங்கு உள்ளன என்பதனை அடையாளப்படுத்தவும், வேறு பகுதிகளுக்கு மாற்றுவதற்கு கட்டிடம் அமைப்பதற்கான பணத்தினை அரசாங்கம் தந்தால், இராணுவ முகாமை மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.

இராணுவ மற்றும் கடற்படை பிரதேசங்களில் இருந்து சிவில் நிர்வாகத்திற்கு மாற்ற வேண்டுமாகயிருந்தால், பொலிஸ் நிலையங்கள் அமைக்க வேண்டிய தேவை இருக்கின்றது.பொலிஸ் நிலையங்கள் அமைப்பதில் அங்கேயும் இரண்டு பிரச்சினைகள் உள்ளன. காணிகளை வாங்குவது, அல்லது காணிகளை சுவீகரிப்பது, அதற்கான பணம். அதேவேளை, பொலிஸ் நிலையங்களை கட்டுவதில் ஏற்படும் தாமதம், அங்கு பணம் விடுவிப்பதில் ஏற்படும் தாமதம்.

இராணுவத்தினரை மாற்றுவதற்கும், பொலிஸ் நிலையங்கள் அமைப்பதற்கும், அரசாங்கம் நிதி ஒதுக்குவதில் தடை இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, இராணுவம் மற்றும் பொலிஸாரின் இந்த கோரிக்கைகள் தொடர்பிலும், அரசாங்கத்துடன் பேச வேண்டியுள்ளது.

மீள்குடியேற்றம், மற்றும் கட்டுமானத்திற்காக எமது மக்களுப்காக நிதியைக் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். நிலமை சுமூகமாவதற்கும், மக்களின் காணிகள் மீண்டும் கிடைப்பதற்கும், அரசாங்கம் அதிகளவான நிதியை ஒதுக்க வேண்டியுள்ளது.

இந்த வருட நிதி ஒதுக்கீட்டில், இந்த விடயங்களையும் கவனிக்குமாறு நாங்களும் அரசாங்கத்திடம் கேட்க வேண்டியதாக உள்ளது. இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், எதிர்வரும் 22 ஆம் திகதி வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார். இந்த கலந்துரையாடலின் போது, காணி விடுவிப்பதற்கான நேர அட்டவணையை கொண்டு வருவதாக விமானப்படையினரும், கடற்படையினரும் கூறியிருக்கின்றார்கள்.

நவம்பர் 8 ஆம் திகதி ஜனாதிபதி செயலணியின் கூட்டம் நடைபெறுகின்ற போது, முடிவுகள் பற்றி அறிவிக்கப்படும். எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டுமென யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி தர்சன ஹெட்டியாராச்சிக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருப்பதாகவும், ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக, குறிப்பிட்ட திகதிக்கு முன்னர், காணி விடுவிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில், நடவடிக்கை எடுத்திருப்பதாக யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி கூறினார்.

ஜனாதிபதி அவ்வாறான ஒரு காலக்கெடு கொடுத்துள்ளதனால், எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர், தனியார் காணிகள் விடுவிப்பது தொடர்பான நிலைப்பாடுகள் அடுத்த செயலணி கூட்டத்தின் போது, காணிகளை விடுவிப்பதற்கான தமது நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி அறிவிப்பதாக இராணுவ தரப்பினர் கூறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment