பொலிஸ் மா அதிபர் பலமுள்ளவராக இருப்பதனாலேயே கூட்டு எதிர்க் கட்சி அவரை நீக்கிவிட இவ்வளவு பெரிய பிரயத்தனங்களை முன்னெடுக்கின்றது என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் பலவீனமானவராக இருந்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பலவீன்படுத்தப்பட்டிருக்கும். அப்போது அது எதிர்க் கட்சிக்கே நல்லதாக இருக்கும். அவ்வாறு இருக்கும் ஒருவரைப் பற்றி அவர்கள் அலட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். பலம் குறைந்த பொலிஸ் மா அதிபர் அரசாங்கத்தின் மதிப்பை இல்லாமற் செய்யலாம்.
ஆனால், அவர்களுக்கு இந்தப் பொலிஸ் மா அதிபர் பிரச்சினையாக தெரிகின்றது என்றால், அங்கு ஏதோ ஒரு அரசியல் லாபம் இருக்கின்றது எனவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டுமல்லாமல், ஊழல் மோசடி விசாரணைப் பிரிவு, குற்றத் தடுப்பு விசாரணைப்பிரிவு மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட ஊழலுக்கு எதிரான உயர் நீதிமன்றங்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்றே அவர்கள் கூறிவருவதாகவும் பிரதி அமைச்சர் பண்டார மேலும் கூறிப்பிட்டுள்ளார்.