பறக்கும் ரெயில் சேவையை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக முழுமையாக ஆராய புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவை தற்போது பல்வேறு கட்டங்களாக தொடங்கப்பட்டு வருகிறது.இதற்கு முன்பு பறக்கும் ரெயில் சேவை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை 3 கட்டங்களாக நிறைவேற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்தது.
முதல் கட்டமாக கடற்கரை-மயிலாப்பூர் இடையே 9 கி.மீ. தூரத்திற்கு பறக்கும் ரெயில் திட்டப்பணி ரூ.266 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு 1997-ம் ஆண்டு நிறைவடைந்தது. 2-வது கட்டமாக மயிலாப்பூர்- வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் திட்டப்பணி ரூ.877.59 கோடி செலவில் 2007-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.
வேளச்சேரியையும் பரங்கிமலையையும் இணைக்கும் பறக்கும் ரெயில் திட்டபணி கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. 5 கிலோமீட்டர் தூரமுள்ள இந்த திட்டத்தில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.ஆதம்பாக்கம், தில்லை கங்காநகர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால் இப்பணியில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பறக்கும் ரெயில் சேவையை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக முழுமையாக ஆராய புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-
பறக்கும் ரெயில் சேவையை மெட்ரோ ரெயிலுடன் இணைக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒருங்கிணைந்த ரெயில் சேவையை அளிக்க முடியும்.பயணிகள் விரைவாக சேவை பெற முடியும். வழக்கமான பயணிகள் மட்டுமல்லாமல் சொந்த வாகனங்களை பயன்படுத்துவோருக்கும் ஏற்ற வகையில் புதிய வசதிகளை கொண்டு வரப்படும்.
ரெயில் நிலையங்கள், ரெயில்களில் ஏ.சி.வசதி, ரெயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்தும் வசதி, உயர்தர உணவகங்கள், வணிக வளாகங்கள் திறக்க உள்ளோம்.மேலும் விடுமுறை நாட்களில் பயணிகள், குழந்தைகளை கவர விளையாட்டு நிகழ்ச்சிகள், கண்காட்சிகளும் நடத்தப்படும். இது குறித்து கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு கட்ட ஆலோசனையும் நடத்தி உள்ளோம்.
மேலும் பறக்கும் ரெயில் சேவையை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் இணைப்பதற்கான செலவு, நிதி, ரெயில்கள் இயக்கம், நிலம், சொத்துமதிப்பு போன்றவை குறித்து நிறுவனம் மூலம் முழுமையாக ஆய்வு நடத்த டெண்டர் வெளியிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.