கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர்களின் திறமைகள் இயலுமைகள் மற்றும் ஆக்கத் திறனை வெளிப்படுத்தும் கண்காட்சியை திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நான் பெரிதும் மதிக்கின்ற பண்டாரநாயக்க கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் திறமைகள் இயலுமைகள் மற்றும் ஆக்கத் திறனை வெளிப்படுத்தும் இந்த கண்காட்சியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளக்கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த ஒரு நூற்றாண்டு காலப்பகுதியில் இந்த கல்லூரியிலும் நாட்டிலும் சமூகத்திலும் மனித வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த கடந்த கால நினைவுகளுடன் நீங்கள் எதிர்காலத்தை நோக்கி பயணிக்க தயாராகுகின்றீர்கள். 100 வருட கடந்த கால வரலாற்றை நினைவுகூருகின்ற நீங்கள், அடுத்து வருகின்ற 100 ஆண்டுகள் உங்களுடைய இலக்காக இருக்க வேண்டும்.
நாம் அறிந்த வகையில் நவீன தொழிநுட்ப உலகில் கடந்த காலத்தை பார்க்கிலும் எதிர்காலம் வித்தியாசமான அனுபவங்கள் நிறைந்தாக இருக்கும்.
நான் இன்று இந்தப் பாடசாலைக்கு வருகைதந்தபோது பாடசாலை அதிபர் பிள்ளைகளின் திறமைகளைப் பற்றி என்னிடம் கூறினார். இங்கு கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள மோட்டார் வண்டிகளை காட்டினார். நான் ஒரு மாணவனிடம் இதன் வேகம் எவ்வளவு என வினவினேன். மணிக்கு 35, 40 கிலோமீற்றர் எனக் கூறினார். மற்றுமொருவர் 55, 60 என்றும் இன்னுமொருவர் 70 என்றும் கூறினார். எனவே இந்த வாகனங்களிலுள்ள வேகம் தான் எதிர்காலத்தை வெற்றிகொள்வதற்கான போட்டியாகும். இந்த வேகத்திற்கும் போட்டிக்கும் நீங்கள் ஈடுகொடுக்க வேண்டியிருக்கிறது.
உலகில் வாழும் மக்கள் பல்வேறு காலப்பகுதிகளில் முகம்கொடுக்கின்ற பல்வேறு வகையான சவால்கள் ஒரேயடியாக ஏற்படுபவையல்ல. சிலபோது நாம் எதிர்பார்க்காத வகையில் அந்த சவால்கள் எம்மை வந்தடைகின்றன. சுற்றாடலைப் பற்றி பேசுகின்றபோது நீங்கள் வாழும் கம்பஹா மாவட்டம் இலங்கையிலேயே வன அடர்த்தி குறைந்த பிரதேசமாகும்.
சுற்றாடலை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி உலகத் தலைவர்களுக்கு இப்போது தான் தேவை ஏற்பட்டிருக்கின்றது. கைத்தொழில் துறையும் நவீன தொழிநுட்பமும் இயற்கை வளங்களை அழித்து முன்னேற்றமடைந்துள்ளது, உலக நாடுகளுக்கு நீங்கள் சென்றால் கொங்ரீட் நகரங்களையே காணமுடியும். உலகின் புதிய தொழிநுட்ப நகரங்களுடன், புதிய நகர அபிவிருத்தி திட்டமிடலுக்கமைய இன்று உலகில் சில நகரங்களுக்குச் சென்றால் அங்கு கட்டடங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. பெரும் மரங்களையும் பசுமைச் சூழலையுமே காணமுடிகிறது.
இந்தியாவின் டில்லி மற்றும் சீனாவின் பீஜிங் நகரத்தைப் போன்று காலையில் தொழிலுக்கு செல்கின்ற மக்களும் பாடசாலை செல்லும் பிள்ளைகளும் ஒட்சிசன் பையை சுமந்து கொண்டு செல்ல வேண்டிய நிலை இலங்கையில் ஏற்படக் கூடாதென்று நாம் பிரார்த்திக்கின்றோம். அப்படியொரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் அது இலங்கையில் கம்பஹா மாவட்டத்திற்கே முதலில் ஏற்படும்.
நான் இவ்வாறு கூறுவது விஞ்ஞான மற்றும் புள்ளிவிபர ரீதியான விடயங்களை அடிப்படையாகக் கொண்டேயாகும். நாட்டில் வன அடர்த்தி அதிகமுள்ள பிரதேசம் வட மாகாணமாகும். நாட்டின் பல மாகாணங்களில் வனப் பிரதேசங்கள் மக்களினால் அழிவுக்குள்ளாகியுள்ளன.
மனிதனுக்கும் மிருகங்களுக்கும் வாழ்வதற்கு தேவையான அடிப்படைத் தேவைகள் பற்றி நீங்கள் அறிவீர்கள். இந்த அடிப்படைத் தேவைகள் இன்று உலகில் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றன. இதனை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். பிறந்த தினத்திற்கு பிள்ளைகளுக்கு கேக் வெட்டுவதற்கு செலவிடும் பணத்திற்கு பதிலாக அனைவரும் வாழ்வதற்கு சிறந்ததோர் சூழலை உருவாக்குவதற்கு பிறந்த தினத்தை முன்னிட்டு மரக்கன்று ஒன்றை நாட்டுங்கள் என்று பிள்ளைகளிடமும் பெற்றோரிடமும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.
கம்பஹா மாவட்டத்தில் விமான நிலையம், வர்த்தக வலயங்கள், கைத்தொழில் துறைகள் உள்ள காரணத்தினால் இம்மாவட்டம் சுற்றாடல் சவால்கள் நிறைந்த மாவட்டமாக மாறியுள்ளது. எனவே பாடசாலை பிள்ளைகள் முதல் சுற்றாடலை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.