வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மிக விரைவில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பாக கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட அனந்தி சசிதரன் வடமாகாண சபைத் தேர்தலில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அடுத்த படியாக 87,212 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
கட்சிக்குள் இருந்தவாறே தமிழரசுக் கட்சியின் சில செயற்பாடுகளையும், அரசாங்கத்தின் தவறுகளையும் சுட்டிக்காட்டி வந்த அனந்தி சசிதரன் மீது கட்சி விதிகளை மீறினார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கெதிராக கட்சியால் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.
இதன் உச்சக்கட்டமாக கடந்த 24.02.2018 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியினுடைய மத்திய குழுக் கூட்டத்தில் அனந்தி சசிதரனைக் கட்சியிலிருந்து வெளியேற்றுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கருத்துத் தெரிவித்த அனந்தி சசிதரன் “என்னுடைய மக்கள் மீதான அரசியல் பயணத்தை மழுங்கடிக்கும் நோக்கில் என்னை இப் பயணத்திலிருந்து தூரமாக்கும் நோக்கில் ஒரு சில காழ்ப்புணர்ச்சி கொண்ட அரசியல்வாதிகளின் செயலாகவே என்னைத் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்க எடுத்துள்ள முடிவை நான் கருதுகின்றேன்” எனக் கூறியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே தற்போது வடமாகாண மகளிர் விவகார அமைச்சராகப் பதவி வகித்து வரும் அனந்தி சசிதரன் இன்னும் சில தினங்களில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ள வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் அனந்தி சசிதரன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன