தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு விடுவிக்கக்கோரி புதுக்கோட்டை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 300 விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு மாதம் ஒன்றுக்கு 1,500 லிட்டர் டீசலை மானிய விலையில் வழங்கி வருகிறது.
ஆனால் இவர்கள் மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரம் லிட்டர் டீசல் செலவாகிறது என கூறுகிறார்கள். இந்த 3 ஆயிரம் லிட்டர் டீசலை அரசே மானிய விலையில் வழங்க வலியுறுத்தியும், மேலும் கடலில் தற்போது மீன்கள் குறைவாக கிடைப்பதாகவும் மீன்களுக்கான விலை மிகவும் குறைவாக இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.
இதனால் மீனவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் இதில் தலையிட்டு உடனடியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை உடனடியாக மீட்டு தரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டம் வருகிற 31-ந் தேதி வரை தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் நாள் ஒன்றுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். மேலும் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.40 லட்சம் வீதம் 9 நாட்களுக்கு ரூ.3 கோடியே 60 லட்சம் வர்த்தகம் பாதிப்பு அடையும். இந்த வேலை நிறுத்தம் காரணமாக மீன்களின் விலை கடுமையாக உயரும் வாய்ப்புள்ளது.
இது குறித்து விசைப்படகு மீனவர்கள் சங்க தலைவர் சின்ன அடைக்கலம் கூறியதாவது:-
தமிழக மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து கைது செய்து வருகிறது. அவர்களிடமிருந்து விசைப் படகுகளையும் பறிமுதல் செய்கிறது. இதனை மீட்டு தர பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மீனவர்களை அவர்களின் படகுகளையும் மீட்டு தரவேண்டும். மீன்களின் விலை குறைவதனால் பெரும் அளவில் இழப்பை சந்திக்க நேரிடுகிறது.
இந்த இழப்பை ஈடுகட்ட மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரம் லிட்டர் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். உயர்ரக மீன்களுக்கு அரசு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதுவரை எங்களது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.