அமெரிக்காவில் 100 கோடி டாலர்களுக்கு அதிகமான மதிப்பில் நிலங்களை வைத்திருப்பவர்களுக்கான சொத்துவரி 65 சதவீதமாக உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் மோதுகிறார்.
இருவரும் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், தன்னை எதிர்த்து போட்டியிடும் பெரும் செல்வந்தரும், ரியல் எஸ்டேட் அதிபருமான டொனால்ட் டிரம்புக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஹிலாரியின் தேர்தல் பிரசார இணையதளம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது, அங்கு 54 லட்சம் டாலர்கள் அளவிலான பணமதிப்புக்கு அதிகமான விலையுள்ள சொத்துகளை தங்களது முன்னோர்கள் மூலமாக பெற்று அவற்றை வைத்து, பராமரித்து வருபவர்களுக்கு 40 சதவீதம் எஸ்டேட் வரி எனப்படும் சொத்துவரி விதிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றிபெற்று, பதவியேற்றால் இந்த வரியை 45 சதவீதமாகவும், நூறு கோடி டாலர்களுக்கும் அதிகமான நிலங்களை வைத்துள்ள தனிநபர் அல்லது தம்பதியருக்கான எஸ்டேட் வரியை 65 சதவீதமாக உயர்த்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாக ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரசார இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பல லட்சம் கோடி ரூபாய் அளவில் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் தனது போட்டியாளர் டொனால்ட் டிரம்புக்கு ‘செக்’ வைக்கும் விதமாக ஹிலாரி இவ்வாறு அறிவித்துள்ளதாக அங்குள்ள அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.