நாட்டிலுள்ள பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையிலான மாணவர்களுக்கு, இலவசமாகப் பால் பக்கெட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்கான வேலைத்திட்டம், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்று மில்கோ நிறுவனத்தின் தலைவர் சிஹார் காதர் தெரிவித்துள்ளார்.
இதன்கீழ், சுமார் பத்து இலட்சம் மாணவர்களுக்கு நாளாந்தம் ஒரு பால் பக்கெட் வீதம் வழங்கப்படவுள்ளது. இதற்காக இரண்டு இலட்சம் லீற்றர் பால் தேவைப்படுகிறது. இதற்கான செலவை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, மில்கோ நிறுவனத்தின் தலைவர் சிஹார் காதர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, “கிராம சக்தி” வேலைத் திட்டத்தின் கீழ் இந்தப் பால் வழங்கப்படவுள்ளது. இதற்காக பாடசாலை மாணவர்களின் பெயர்ப் பட்டியலை, கல்வியமைச்சு கோரியுள்ளது.
பண்ணையாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய பணம், உரிய காலத்தில் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களுக்குச் செலுத்த வேண்டியிருந்த எஞ்சிய தொகை, தற்பொழுது செலுத்தப்பட்டுள்ளது.
மில்கோ நிறுவனம், நாளாந்தம் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் லீற்றர் பாலைச் சேகரிக்கிறது. இதனை ஐந்து இலட்சமாக அதிகரிப்பதே, இந்நிறுவனத்தின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.