இந்தியாவின் வெளியுறவு கொள்கையும் ஈழப் போரின் ஆரம்பமும் முடிவும்?

301 0

ஈழ விடுதலைப் போராட்டத்தில் இந்திய அரசின்  தலையீடு என்பது எப்போதும்  தொடர்ந்து  கொண்டே இருக்கின்றது.

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப நாட்களில்  போராட்டத்தை ஆதரிப்பது போன்று அரவணைத்த இந்தியா. போராட்ட கள  இளைஞர் அணிகளை மோதவிட்ட சாணக்கியம் ஈழ விடுதலை போராட்டத்தின் கறை  படிந்த அத்தியாயங்கள்.

இந்திய- இலங்கை ஒப்பந்தம் மூலம் ஈழத்தீவில் “அமைதிப் படை” என்ற போர்வையில் இந்திய ஆக்கிரமிப்புப் படை  கால் பதித்து ஈழத்தமிழர்களையும் போராளிகளையும் கொன்றெழித்து தனது  கோர முகத்தை உலகிற்கு காட்டியது.

தமிழீழ  அரசு  ஒன்று அமைவதை  இந்தியா எப்போதும் விரும்பியதில்லை. அதுமட்டுமல்ல  ஈழ விடுதலைப்போராட்டத்தை அழித்தொழிப்பதற்காக காலம் காலமாக செயற்பட்டது. இந்தியாவின் புலனாய்வு அமைப்பான  “றோ”(RAW)  எப்போதும் போராட்டத்தையும் தமிழ் மக்களுக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளையும்  அழித்தொழிக்க  கழுகு பார்வையோடு  செயற்பட்டது.

விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ளேயே பிரிவினையை ஏற்படுத்தி தலைமையை அழிக்க முற்பட்ட  வேளை  அது விடுதலைப்புலிகளால் முறியடிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக விடுதலை வேண்டி நின்ற மக்களையும் விடுதலைப்புலிகளையும் சிறிலங்கா அரசு முற்றாக அழித்தெழித்த   மனிதம் வெட்கி தலைகுனியும்   இறுதி யுத்தின் போது சிறிலங்காவிற்கு பல்வேறு நாடுகள் உதவின. அதில் குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு  முதன்மைப்பட்டு  இருந்தது.

இந்தியாவின் பங்களிப்பு பற்றி  சிங்கள தலைமைகள்  அண்மைக்காலமாக வெளிப்படையாக கூறிவருகின்றனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்  ஒகஸ்ட் 16 (2018) மரணமடைந்தார். அவரின் மரணம் குறித்து சிறிலங்காவில்  உள்ள இந்திய  தூதரகத்தில் இரங்கல் அஞ்சலி  நடைபெற்றது.

அந்த அஞ்சலிக்கு  சென்ற சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க  இரங்கல் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துவிட்டு சென்றார்.

அதில்..“விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பங்கேற்க சிறிலங்கா  வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க வாஜ்பாய் ஏற்பாடு செய்தார்  . மேலும் அந்த கால கட்டத்தில் விடுதலைப்புலிகள் மிகவும் பலம் பெற்று இருந்ததார்கள் , கடற்புலிகளுக்கு எதிராக சிறிலங்கா  கடற்படை கடுமையான நடவடிக்கை எடுக்க வாஜ்பாய் உதவிகள் செய்ததார் , வாஜ்பாய் இல்லை என்றால் கடற்புலிகளை அழித்திருக்க முடியாது.  என பதிவிட்டார்.

எனவே, இந்தியா எவ்வாறு உதவியது என்பதனை சிறிலங்கா பிரதமரே தனது  வாக்குமூலத்தை   பதிவிட்டுள்ளார்.

அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த சிறிலங்காவின்  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ,   இறுதி   போரில் இந்தியாவின் பங்கு  தமது அரசுக்கு பெரும் உதவியாக இருந்து என்றும் , இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் வெளிப்படையாக உதவியதாகவும்  ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கினார்.

இந்தியாவினுடைய வெளிநாட்டு செயலாளர் சிவசங்கர் மேனன் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணன், இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் விஜய்சிங் ஆகிய மூவருடனும் ஒவ்வொரு நாளும் விவாதித்து தான் போரை நடத்தினோம் என்று,  அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  போர் முடிந்ததும் சிறிலங்கா நாடாளுமன்றத்தில்  கூறியிருந்தார். என்பது மிக முக்கியமாக கவனிக்த்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அங்கு அமெரிக்க வாழ்  இலங்கையர்களிடத்தில் உரையாற்றியிருந்தார்.

அதன்போது, இறுதி யுத்தத்தில் இறுதி இரண்டு வாரங்களில் நடந்த உண்மை தனக்கு மட்டும் தான் தெரியும் என்று தெரிவித்தார். அந்த உண்மை எதுவோ? ஏனெனில்   பாதுகாப்பு அமைச்சு பொறுப்பு  அப்போது மைத்திரி வசமே இருந்தது.

காலங்கள் உருண்டு ஓட உண்மைகள் அவர்கள்  வாயாலேயே வெளிவர தொடங்கி விட்டது.

தன்வினை தன்னைச்சுடும்!  ஓட்டப்பம்  வீட்டைச்சுடும்  !

துவாரகா கலைக்கண்ணன்

நன்றி- தினக்குரல்-14-10-2018

Leave a comment