30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் குடும்பத்துடன் 5 நாள் உண்ணாவிரத போராட்டம்

277 0

30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 26 முதல் 30ம் தேதி வரையில் 5 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 5 மண்டலங்களில்  நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சங்கத்தின் மாநில தலைவர் கு.பால்பாண்டியன் கூறியதாவது: பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் மற்றும் அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை  நடத்தியுள்ளோம். பலவகைகளில் அரசுக்கு எங்களின் கோரிக்கையை எடுத்து சென்றுள்ளோம். தொடர்ந்து எங்களின் கோரிக்கை மீது எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. எனவே, பொது கோரிக்கைகளான பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், மாற்றுத்திறனாளி பணியாளர்களை அரசு துறைகளில் உள்ள காலிபணியிடங்களில் நியமிக்க வேண்டும்.

இதேபோல்,  டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட ஏ,பி,சி சுற்றறிக்கையின் படி அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக பணியிட மாறுதலை செயல்படுத்த வேண்டும். அதேபோல், 500 இளநிலை  உதவியாளர் பணியிடங்களுக்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு எதிராக நிர்வாகம் நீதிமன்றத்தை நாடி தடையை விலக்குகோர வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கையை  வலியுறுத்தி அடுத்த மாதம் 26 முதல் 30ம் தேதி வரையில் தமிழகம் முழுவதும் சேலம், திருச்சி, மதுரை, சென்னை, கோவை ஆகிய 5 மண்டலங்களில் குடும்பத்துடன் 5 நாட்கள் தொடர்  உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளோம். மொத்தம் 5 ஆயிரம் ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்கள்.

இதுகுறித்த கடிதத்தை இன்று  டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரிடம் வழங்க உள்ளோம்.இவ்வாறு கூறினார்.

Leave a comment